×

சின்னமனூரில் நெல் அறுவடைப்பணி தீவிரம்: மழையால் மகசூல் பாதிப்பு

சின்னமனூர்: சின்னமனூர் பகுதிகளில் முதல்போக நெல் அறுவடை துவங்கியதால் மார்க்கையன்கோட்டை சாலை நெல்கொள்முதல் பகுதியாக மாறியுள்ளது. சின்னமனூர் கே.கே.குளம், வேம்படிகளம், முத்துலாபுரம் பிரிவு, நத்தத்துமேடு, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், துரைச்சாமிபுரம், கூழையனூர் உள்ளிட்ட பகுதிகளில் நான்காயிரம் ஏக்கரில் முதல் போக நெல்சாகுபடி செய்யப்பட்டிருந்தது. முல்லைப் பெரியாற்று பாசனத்தில் 120 நாட்கள் வளர்த்த நெல் கதிராகி தற்போது அறுவடைக்கு வந்துள்ளது. இதன் முதற்கட்டமாக குச்சனூரில் துவங்கி படிப்படியாக மார்க்கையன்கோட்டையிலும் அறுவடைப்பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த இரண்டு வாரமாக நெல் அறுவடை துவங்கிய நேரத்தில் இயந்திரம் சரிவர கிடைக்காததால் அறுவடையில் தொய்வு ஏற்பட்டது.

இதையடுத்து சேலம், கரூர், திருச்சி, மதுரை போன்ற பகுதிகளிலிருந்து இயந்திரங்கள் அதிகளவில் வரவழைக்கப்பட்டதால் அறுவடைப்பணி தற்போது வேகமாக நடந்து வருகிறது. சின்னமனூர் பகுதியில் பெய்த தொடர் மழையால்  மகசூல் சற்று பாதிப்பு அடைந்துள்ளதால் பெரிய லாபம் கிடைக்காது என்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது அறுவடை செய்யப்பட்ட நெல்களை சின்னமனூர் - மார்க்கையன்கோட்டை சாலையில் குவித்து மூட்டைகளாக தயார் செய்கின்றனர். இப்பகுதிக்கு வரும் வியாபாரிகள் விலைபேசி கொள்முதல் செய்து வருவதால் சின்னமனூர் பகுதி ஒரு மாதம் வரை  நெல்கொள் முதல் நகரமாக மாறியுள்ளது.

Tags : Chinnamanur , Chinnamanur, Paddy Harvesting Work, Rainfall, Yield
× RELATED வாகனம் மோதி எலட்ரீசியன் பலி