எல்லை மறுசீரமைப்பு மண்டலங்கள் கோட்டம் உருவாக்கும் கோரிக்கைகளை 10 ஆண்டுக்கு ஒருமுறை பரிசீலிக்கலாம்: ரயில்வே வாரியத்திற்கு டிஆர்இயூ ஆலோசனை

இந்திய ரயில்வேயில் மொத்தம் 16 மண்டலங்கள் உள்ளன. நிர்வாக காரணங் களுக்காக அந்த மண்டலங்கள் 68 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பிட்ட சில பகுதிகளை ஒரு கோட்டத்தில் இருந்து பிரித்து மற்றொரு கோட்டத்தில் சேர்க்க வேண்டும், புதிய மண்டலங்கள் அல்லது புதிய கோட்டங்கள் உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகின்றன. இந்திய சுதந்திரத்திற்கு முன்பிருந்த 42 ரயில்வே அமைப்புகள் முதலில் 6 மண்டலங்களாக மாற்றப்பட்டன. தெற்கு ரயில்வேதான் முதல் இந்திய அதிகா பூர்வ ரயில்வே மண்டலம். உருவான நாள் 14 ஏப்ரல் 1951.அதே ஆண்டு (1951) நவம்பர் 5 ம் தேதி மத்திய மற்றும் மேற்கு ரயில்வே உருவானது. 1952 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி கிழக்கு, வடக்கு, வட கிழக்கு ரயில்வேக்கள் உருவாயின. 1955 முதல் 1966 வரையிலான காலக்கட்டத்தில் தென் கிழக்கு ரயில்வே, வடகிழக்கு எல்லை ரயில்வே, தென்மத்திய ரயில்வே என மேலும் மூன்று ரயில்வேக்கள் உருவாயின.

1981 ம் ஆண்டு ரயில்வே சீர்திருத்த குழு உருவாக்கப்பட்டது. அது புவியியல், இருப்பு பாதைகளின் தூரம், பணிச்சுமை, மொழி, மாநிலம், நிர்வாக வசதி போன்ற பல அம்சங்களை ஆராய்ந்து பரிந்துரைத்ததின் பேரில் வட மேற்கு, வட மத்திய , கிழக்கு மத்திய மற்றும் தென் மேற்கு என மேலும் நான்கு மண்டல ரயில்வேக்கள் 1984ம் ஆண்டு உருவாயின. இந்நிலையில், அதிகபட்சமாக 2009 முதல் 13 ம் ஆண்டு முடிய நான்கு நிதியாண்டுகளில் மட்டும் 32 புதிய மண்டலங்கள், 45 புதிய கோட்டங்கள் உருவாக்க 239 கோரிக்கைகள் அரசுக்கு வந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறு கின்றன. இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் மாநில துணை பொதுச் செயலாளர் மனோகரன் கூறுகையில், 1994-95 நிதியாண்டு புதிய மண்டலங்கள் உருவாக்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. மேலும் 6 மண்டல ரயில்வேக்கள் உருவாக இந்த குழு பரிந்துரைத்தது. 1996ம் ஆண்டு அமைச்சரவை இதற்கு ஒப்புதல் தந்தது. இதனை தொடர்ந்து 2002-03 நிதியாண்டு கிழக்கு கடற்கரை, கிழக்கு மத்திய, வட மத்திய, வட மேற்கு, மேற்கு மத்திய, தென் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலங்கள் உருவாயின. இது தவிர 2010 ம் ஆண்டு கொல்கத்தா மெட்ரோ ரயில்வே தனி மண்டலமாக அறிவிக்கப்பட்டது.

தெலங்கான மாநிலம் உதயமானபோது விசாகப்பட்டிணத்தை தலைமையிடமாக கொண்டு மண்டல ரயில்வே உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதற்காக அமைக்கப்பட்ட ஆய்வுக்குழு 2014ம் ஆண்டு நிராகரித்தது. இதுபோன்ற கோரிக்கைகளுக்கு தீர்வுகாண, கடந்த ஏப்ரல் 2017 ஆறு அதிகாரிகள் குழுவை அரசு அமைத்தது. இந்த குழுவிற்கு 26 மண்டலங்கள் 53 கோட்டங்கள் உருவாக்க 174 பரிந்துரைகள் வந்து சேர்ந்தன. ஒரு மண்டலம் உருவாக்க ரூ.205 கோடியும், ஒரு கோட்டம் உருவாக்க ரூ.29 கோடியும் செலவாகும். புதிதாக மண்டலமோ, கோட்டமோ இப்போதைக்கு உருவாக்க அவசியம் இல்லை என குழு தெரிவித்தது.

வடக்கு ரயில்வே 7300 கி.மீ பாதையுடனும் மேற்கு ரயில்வே 6500 கி.மீ பாதையுடனும் பெரிய மண்டல ரயில்வேக்களாகவும், 2500 கி.மீ பாதையுடன் தென் கிழக்கு ரயில்வே சிறிய மண்டல ரயில்வேயாகவும் தற்போது இயங்கி வருகின்றன.

தேசிய ரயில் போக்குவரத்து மண்டலங்கள் மற்றும் கோட்டங்களாக பிரித்து இருபது நிர்வாக வசதிக்காக. இருப்பினும் அவ்வப்போது கோரிக்கைகள் தொடரவே செய்கின்றன. புதிய கோட்டங்கள் மண்டலங்கள் உருவாக்குவது மற்றும் எல்லை மறு சீரமைப்பு கோரிக்கைகளை பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ரயில்வே பரிசீலனை செய்யலாம் என ரயில்வே வாரியத்திற்கு தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் வழிகாட்டுகிறது. இவ்வாறு மனோகரன் கூறினார்.

Related Stories: