×

தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை வசதி கிடைக்காமல் புற்றுநோயாளிகள் கடும் அவதி

தேனி: தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை வசதி கிடைக்காமல், அவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, புகையிலை பொருட்கள் விற்பனை அமோகமாக நடக்கிறது. தவிர சிகரெட் புகைத்தல் உள்ளிட்ட பழக்க வழங்கங்களாலும் இங்கு பெருமளவில் பாதிப்புகள் உருவாகி வருகிறது. தேனி மாவட்டத்தில் அதிகாரிகள் மற்றும் அரசு நிர்வாகத்தின் மெத்தனப் போக்கினால் புற்றுநோய் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து தனியார் தொண்டு நிறுவனம் சர்வே நடத்தியது. இதில் கடந்த சில ஆண்டுகளில் தேனி மாவட்டத்தில் வாய்ப்புற்றுநோய், கர்ப்பபை புற்றுவாய், கர்ப்பவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையினை அந்த தொண்டு நிறுவனம் அரசுக்கு அனுப்பி உள்ளது.

இந்நிலையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், கதிர்வீச்சு சிகிச்சை வசதிகள், ஆபரேஷன் வசதிகள் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இல்லை. இதனால் இவர்கள் இங்கிருந்து மதுரை மருத்துவக் கல்லூரிக்கு செல்ல வேண்டி உள்ளது. ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து குவியும் நோயாளிகளால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவு திணறுகிறது. இதனால் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை மாறி, பல நாட்கள் காத்திருந்து சிகிச்சை பெறும் நிலை காணப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.சி.ஆறுமுகம் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த மோசமான சூழ்நிலை காரணமாக புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை பெருகி உள்ளது. அரசு முதலில் புற்றுநோய் பரவும் காரணங்களை கண்டறிந்து தடுத்து நிறுத்த வேண்டும். மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்துடன் தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை வசதிகள் ஆபரேஷன் தியேட்டர், கதிர்வீச்சு சிகிச்சை உள்ளிட்ட வசதிகளை செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினார்.

Tags : hospital ,Theni Medical College ,cancer patients ,Theni Medical College Hospital , Theni, Medical College, Hospital, Treatment, Oncologists
× RELATED ‘ஐசியு’ நோயாளிகளின் மனநலனை...