×

பவானிசாகர் அருகே கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு வாக்குச்சாவடி வெறிச்சோடியது: 26 வாக்குகள் மட்டுமே பதிவு

சத்தியமங்கலம்: பவானிசாகர் அருகே தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்ட சுஜில்குட்டை கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் 26 வாக்குகள் மட்டுமே பதிவானது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புங்கார் ஊராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் உள்ள பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதியில் சுஜில்குட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 120க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பவானிசாகர் மக்கள் அணையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ள இக்கிராமத்தில் உள்ள மக்கள் பல ஆண்டுகாலமாக வசித்து வருவதால், வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதுவரையிலும் பட்டா வழங்கப்படாததால், உள்ளாட்சி தேர்தலை புறக்கணித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். மேலும் 1வது வார்டு உறுப்பினர் பதவிக்கு யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.   இதையடுத்து சம்பந்தப்பட்ட துறையினர் சுஜில்குட்டை கிராம மக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த வார்டில் மட்டும் 228 வாக்காளர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், கிராம ஊராட்சித்தலைவர் என 3 பதவிகளுக்கு மட்டும் நேற்று காலை சுஜில்குட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால் கிராம மக்கள் யாரும் வாக்களிக்க செல்லாமல் புறக்கணித்ததோடு கிராமங்களில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இந்த வாக்குச்சாவடிக்குட்ட நந்திபுரம் வனகிராமத்தில் உள்ள 26 வாக்காளர்கள் மட்டுமே நேற்று மாலை 5 மணி வரை வாக்களித்திருந்தனர். இதன் காரணமாக இந்த வாக்குச்சாவடியில் 10 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. சுஜில்குட்டை கிராமத்தை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : village ,Bhawanisagar , Bhavanisagar, Election boycott, polling, registration
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...