×

ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் 3,000 மீனவ குடும்பங்களுக்கு நிவாரண நிதி நிறுத்திவைப்பு : உடனே வழங்க சங்க தலைவர்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் மீனவர் மற்றும் மீனவ மகளிர் கூட்டுறவு சங்கங்கள் 116 உள்ளது. இந்த சங்கங்களில் 32 ஆயிரம் உறுப்பினர்கள் உள்ளனர். சேமிப்பு நிவாரண நிதியாக உறுப்பினர் செலுத்தும் ரூ.1,600 தொகையுடன் மத்திய, மாநில அரசுகளின் நிதியும் சேர்த்து மொத்தம் ரூ.4,500 வழங்கப்படுகிறது. இதுபோல் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மீன்பிடி தடைகால நிவாரண நிதி ரூ.5 ஆயிரம், மீன்பிடி குறைவு கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரமும் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கணவனை இழந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ பெண்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இத்தொகை அனைத்தும் மீன்வளத் துறையால் மீனவரின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. நடப்பு ஆண்டில் மீனவர்களுக்கென அரசால் வழங்கப்படும் மீன்பிடி தடைகால நிதி, மீனவர் சேமிப்பு நிதி மற்றும் மீன்பிடி குறைவுகால நிதி சமீபத்தில் ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதி மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மீனவர்களுக்கு வழங்க வேண்டிய மீன்பிடி குறைவு கால நிதி இன்று வரை வழங்கவில்லை என்று மீனவர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மீன்பிடி குறைவு காலத்தில் அரசால் வழங்கப்படும் நிதி ரூ.5 ஆயிரம் பெறுவோர் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ள நிலையில், 3 ஆயிரம் பேருக்கு இந்த நிதி வழங்கவில்லை. இதுபோல் 500க்கும் மேற்பட்ட மீனவ விதவை பெண்களுக்கு வழங்க வேண்டிய ரூ.5 ஆயிரம் நிதியும் வழங்க வில்லை. உடனடியாக நிவாரண நிதியை வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர் குடும்பங்கள் நிவாரண நிதி பெறமுடியாமல் தவித்து வருவதாக மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்களை வஞ்சிக்காமல் அரசால் வழங்கப்படும் நிதியை அனைவருக்கும் வழங்க வேண்டும் என  மீனவர் கூட்டுறவு சங்க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Rameswaram Island , Relief fund ,3,000 fishermen ,Rameswaram Island
× RELATED கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்க...