×

சேலம் அருகே அதிமுக சின்னத்தில் சீல் குத்திய வாக்கு சீட்டு வழங்கியதால் சர்ச்சை : எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் முற்றுகை

கெங்கவல்லி:  சேலத்தை  அடுத்த கூடமலையில், ஊராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கான சின்னத்தில்  சீல்  குத்தப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் வழங்கியது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. சேலம்  மாவட்டத்தில், 20 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இதில் 12 ஊராட்சி  ஒன்றியங்களுக்கான முதற்கட்ட தேர்தல், கடந்த 27ம்தேதி நடந்தது. இதையடுத்து  மீதியுள்ள 8 ஒன்றியங்களுக்கான 2ம்கட்ட தேர்தல்  நேற்று காலை  7மணிக்கு தொடங்கியது. இதில் கெங்கவல்லி ஒன்றியத்திற்கு உட்பட்ட கூடமலை  ஊராட்சியின் 12 வார்டுகளுக்கான உறுப்பினர், ஒன்றியக்குழு கவுன்சிலர்,  மாவட்ட ஊராட்சிக்குழு கவுன்சிலர், ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு  அங்குள்ள அரசுப்பள்ளியில் நடந்தது. இதில் ஊராட்சி தலைவர்  பதவிக்கு திமுக சார்பில் யசோதா துரைசாமி, அதிமுக சார்பில் சந்திரா ரமேஷ்  ஆகியோர் போட்டியிட்டனர்.

இதில் அதிமுக வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்ட  சின்னத்தில், ஏற்கனவே வாக்களித்தது போன்று சீல் குத்தப்பட்டிருந்தது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து முன்னாள்   எம்எல்ஏ சின்னதுரை தலைமையில்,  வாக்கு மையத்தில் திமுகவினர் திரண்டனர். ஏற்கனவே சீல் குத்தப்பட்ட  சீட்டுகள் வந்தது எப்படி என்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று  அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர்கள் அளித்த பதில் முரணாக  இருந்ததால், தலைவர் பதவிக்கான வாக்குப் பதிவை நிறுத்த வேண்டும் என்று  கோரிக்கை வைத்தனர். இதனை அதிகாரிகள் ஏற்காததால், திமுகவினர்  முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘வாக்குச்சீட்டுக்கு  சீல் வைத்து அனுப்பிய போது, அது தவறுதலாக பட்டிருக்கலாம் என்கின்றனர்.  ஆனால், ஒட்டுமொத்த சீட்டுகளிலும் அப்படி இருப்பதை தவறுதல் என்று ஏற்க  முடியாது. இது அதிமுகவினர் திட்டமிட்டு செய்யும் சூழ்ச்சியாகும். எனவே,  வாக்குப்பதிவை நிறுத்த வேண்டும்’’ என்றனர்.  இதையடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில், டிஎஸ்பி அண்ணாமலை உள்ளிட்ட  அதிகாரிகள்,  சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து  சீல் குத்தப்பட்ட வாக்குச்சீட்டு புத்தகத்தை ஒதுக்கி வைப்பதாக அதிகாரிகள்  உறுதி அளித்தனர். இதை ஏற்று திமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் 2மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

Tags : DMK ,protests ,Salem Salem ,AIADMK , Controversy ,sealed ballot papers ,AIADMK symbol near Salem
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி