×

இந்தியாவுடன் ஒருநாள் தொடர் ஆஸ்திரேலிய அணியில் அபாட்டுக்கு பதிலாக ஷார்ட்

மெல்போர்ன்: இந்திய அணியுடன் ஒருநாள் போட்டித் தொடரில் மோதவுள்ள ஆஸ்திரேலிய அணியில் அதிரடி தொடக்க வீரர் டார்சி ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். புத்தாண்டில் இந்தியா வரும் ஆஸ்திரேலிய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் ஜனவரி 14ம் தேதி நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து 2வது போட்டி ராஜ்கோட் (ஜன. 17), 3வது மற்றும் கடைசி போட்டி பெங்களூருவில் (ஜன. 19) நடைபெறும். இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் இடம் பெற்றிருந்த வேகப் பந்துவீச்சாளரும் ஆல்-ரவுண்டருமான ஷான் அபாட் காயம் காரணமாக விலகியுள்ளார். பிக் பாஷ் டி20 தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்த அவர், கடந்த சனிக்கிழமை சிட்னி தண்டர் அணிக்கு எதிரான போட்டியில் காயம் அடைந்தார்.

விலா பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைய 3 முதல் 4 வாரமாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து இந்திய சுற்றுப்பயணத்தில் இருந்து அவர் விலகினார். இதைத் தொடர்ந்து, ஷான் அபாட்டுக்கு பதிலாக சுழற்பந்துவீச்சாளரும் அதிரடி பேட்ஸ்மேனுமான டார்சி ஷார்ட் ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். இவர் இதுவரை 4 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். பிக் பாஷ் டி20 தொடரில் அதிரடியாக ரன் குவித்து வந்ததை அடுத்து, 2018ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் தேசிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டார்சி ஷார்ட், டேவிட் வார்னர், ஆஷ்டன் ஏகார், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), பேட் கம்மின்ஸ், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசல்வுட், மார்னஸ் லாபுஷேன், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவன் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், ஆஷ்டன் டர்னர், ஆடம் ஸம்பா.

Tags : India ,Abbott ,Short ,ODI , India, ODI series, Australian team, Short
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...