×

போலி ஆவணங்கள் மூலம் 1 கோடி கடன் மோசடி: வங்கி மேலாளர் உட்பட 5 பேருக்கு 7 ஆண்டு சிறை : சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: போலி ஆவணங்கள் மூலம் 1 கோடி கடன் வாங்கி மோசடி செய்த வங்கி மேலாளர் உட்பட 5 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ₹51.50 லட்சம் அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னையை சேர்ந்தவர்கள் நூர்ஜகான் (52), இவரது கணவர் அப்துல் கபூர் (58), அன்வர் செரிப், சுரேந்தரராஜ் (42). இவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வந்துள்ளனர். தொழிலை மேம்படுத்த கடந்த 2003ம் ஆண்டு, நெற்குன்றத்தில் உள்ள கனரா வங்கியில் ₹1 கோடி கடன் வாங்கி உள்ளனர். இந்த நிலையில், கடன் வாங்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்படி சிபிஐ அதிகாரிகள் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், கடன் வாங்கியவர்கள் சமர்ப்பித்த ஆவணத்தில் பட்டா, பிறப்பு, இறப்பு சான்றிதழ் என அனைத்தும் போலியாக தயாரிக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

இதற்கு வங்கி மேலாளர் சந்திரஹாசன் உடந்தையாக இருந்தது, சிபிஐ அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து 2005ம் ஆண்டு இந்த வழக்கில் வங்கி மேலாளர் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.  வழக்கு விசாரணை சென்னை 11வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.ஜவஹர் முன்பு நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் தினகர் ஆஜராகி வாதிட்டார். வழக்கு விசாரணையின் போது அன்வர் செரிப், திருநாவுகரசு, கிருஷ்ணன் ஆகியோர் இறந்துவிட்டனர். மற்ற 5 பேர் மீதான வழக்கு விசாரணை மட்டும் நடந்து வந்தது.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு, சாட்சி விசாரணைகள் என அனைத்தும் முடிந்தநிலையில் வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி, வங்கி மேலாளர் உள்பட 5 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது, எனவே வங்கி மேலாளர் சந்திரஹாசனுக்கு 4 ஆண்டு 4 லட்சத்து 50 ஆயிரம், நூர்ஜகானுக்கு 7 ஆண்டு 20 லட்சம் அபராதம், அப்தூல் கபூருக்கு 7 ஆண்டு 20 லட்சம் அபராதம், சுரேந்தரராஜுக்கு 4 ஆண்டு 1 லட்சம் அபராதம், பாலசுப்பிரமணியன் 4 ஆண்டு சிறை 6 லட்சம் அபராதம் என மொத்தம் 51 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 


Tags : CBI ,court ,bank manager , Dummy documents, credit fraud, bank manager, 7 year jail, CBI court
× RELATED திருப்போரூர் அருகே துப்பாக்கிகள்...