×

சாலையோர கடைகளில் ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் பேப்பரில் உணவு விற்பனை: கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திருவொற்றியூர்: இரவு நேரங்களில் சாலையோரக் கடைகளில் ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் பேப்பர்களில் உணவுப் பொருள்கள் கட்டி தருவதால் பொதுமக்களுக்கு பல்வேறு கொடிய தொற்று நோய் தாக்கும் அபாயம் உள்ளது.  இதுபற்றி புகார் செய்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   ஒருமுறை பயன்படுத்திய தூக்கி எறியக் கூடிய மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பைகளால் நிலவளம், நீர்வளம் பாதிக்கப்படுவதோடு, கால்நடைகள் இந்த பிளாஸ்டிக் பைகளை தீண்டுவதால் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகி உயிரிழக்கின்றன. மேலும், இந்த பிளாஸ்டிக் பைகள் சாலையோரங்களில் சிதறிக் கிடப்பதால் மழைக்காலங்களில் இந்தப் பைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி பொதுமக்களுக்கு பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதோடு சுற்றுப்புற சுகாதாரமும் சீர்கெடுகிறது.

 இதையடுத்து  மக்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசு தடை செய்தது. மேலும், பாதிப்பு ஏற்படக்கூடிய தடை செய்யப்பட்டுள்ள  14 வகையான படங்களை நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டதோடு  சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, பெரும்பாலான வணிக வளாகங்கள், விற்பனையகங்களில் இந்த பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டு மக்கும் தன்மை கொண்ட லேசான பிளாஸ்டிக் பைகள் மற்றும் ரசாயனம் இல்லாத காகித பைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.  மேலும், மாநகராட்சி அதிகாரிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறதா என்று அதிரடியாக விற்பனையகங்களில் நுழைந்து சோதனை செய்கின்றனர். அவ்வாறு பயன்படுத்தி இருந்தால் அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ஆனால் சாலையோர கடைகளில் இந்த தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு பெரும்பாலும் இருந்து வருகிறது.

குறிப்பாக சாலையோர பகுதிகளில் விற்கப்படும் பிரியாணி, பிரிஞ்சி, கொத்து பரோட்டா, ப்ரைடுரைஸ் போன்ற உணவு பொருட்கள் மற்றும் கோழிக்கறி,  ஆட்டுக்கறி, மீன் போன்ற விற்பனை செய்யக்கூடிய சிறு கடைகளிலும் சகஜமாக விற்கப்படுகிறது.
அதிலும் இரவு நேரங்களில் இதன் பயன்பாடு அதிக அளவிலேயே உள்ளது. அதிகாரிகள் பகல் நேரத்தில் மட்டுமே சோதனை செய்வதால் இரவு நேரங்களில் எந்தவித தடையும் இல்லாமல் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பேப்பர்கள் பயன்படுத்தபடுகிறது. எனவே அதிகாரிகள் இரவு நேரங்களிலும் இதுபோன்ற தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், “வடசென்னையில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள  பகுதிகளில் சாலையோர கடைகள் விற்கக்கூடிய உணவு பொருட்கள் பெரும்பாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளே பயன்படுத்தப்படுகிறது. மேலும், சிற்றுண்டி உணவுகள் ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து மடித்து கொடுக்கப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் பேப்பரில் உள்ள ரசாயனம் உணவோடு கலந்து பொதுமக்களுக்கு பல்வேறு  கொடிய நோய்கள் ஏற்படுகிறது. இவ்வாறு விற்கப்படுவது குறித்து மாநகராட்சி மற்றும் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தால் அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. மக்காத பிளாஸ்டிக் பைகளை விட ரசாயனம் கலந்த பிளாஸ்டிக் பேப்பரை உணவுப்பொருள் பாக்கெட் செய்ய பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது. எனவே சிறு கடைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சோதனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

கொசு உற்பத்தி:
திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற பகுதிகளில் சாலையோரங்களில் ஒரு சிலர் ஆக்கிரமித்து அங்கு கொட்டகை அமைத்து பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மக்காத பிளாஸ்டிக் பைகளை வாங்கும் கடை நடத்தி வருகின்றனர். இவர்கள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு பிளாஸ்டிக் பொருள்கள் சேகரித்த பின்புதான் அதை பிளாஸ்டிக் உருக்காலை  அனுப்புகின்றனர். இவ்வாறு திறந்த வெளியில் நாட்கணக்கில் சேமித்து வைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பைகளில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தி ஆகிறது. அதுமட்டுமின்றி சில நேரங்களில் இதுபோன்ற கடைகளில் தீ விபத்து ஏற்பட்டு பெரும் பாதிப்புகளும் ஏற்படுகிறது.

தடை விதிக்க வேண்டும்:
சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணியாளர்கள், குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும்  குப்பைகளில் மக்காத குப்பையான பிளாஸ்டிக் பொருட்களை தரம்பிரித்து அதை பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி  மூலப்பொருளாக்கும் சிறு தொழில் செய்பவரிடம் கொடுக்கின்றனர். இவ்வாறு பழைய பிளாஸ்டிக்  உருக்கு ஆலைகள்  திருவொற்றியூர் கடற்கரை சாலை, மணலி அருகே உள்ள வடபெரும்பாக்கம் போன்ற பல இடங்களில் குடியிருப்புகளுக்கு மத்தியிலேயே செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளிலிருந்து இருந்து வெளியேறும் புகையால் பொதுமக்களுக்கு நுரையீரல் பாதிப்பு, சுவாசக்கோளாறு, புற்றுநோய் கண்பார்வை பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது. இதில் பல நிறுவனங்கள் எந்தவிதமான முறையான அனுமதியோ பாதுகாப்பு அம்சம் இல்லாமலேயே அதிகாரிகளின் ஒத்துழைப்போடு  செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே குடியிருப்புக்கு மத்தியில் செயல்படும் இதுபோன்ற பிளாஸ்டிக் உருக்கு தொழிற்சாலைகள் செயல்பட அதிகாரிகள் தடை விதிக்க வேண்டும் என்று குடியிருப்போர் சங்கத்தினர் தெரிவித்தனர்.



Tags : roadside stores , Chemical, plastic paper, food sales
× RELATED சாலையோர கடைகளில் ரசாயனம் கலந்த...