×

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓட்டு போட வாக்காளருக்கு 25 கிலோ அரிசி விநியோகம்: போலீசார் விரட்டியதால் சுவர் ஏறிக்குதித்து ஓட்டம்

ஆரணி: ஆரணி, மேற்கு ஆரணி ஒன்றியத்தில் வாக்காளர்களுக்கு டோக்கன் முறையில் 25 கிலோ அரிசி சிப்பம் விநியோகம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சிக்கான 2ம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் ஆரணி அடுத்த ேசவூர் ஊராட்சியில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் சிலர் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கினர். மேலும், வாக்குப்பதிவு நடைபெறும் நேற்று காலை முதல் டோக்கன் முறையில் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதனால் ஒரு அரிசி ஆலை முன் கூட்டம் அலைமோதியது. அங்கிருந்து 25 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையை எடுத்துச்சென்றனர். இதையறிந்த போலீசார் வந்து அங்கிருந்தவர்களை வெளியேற்றினர். சிலர் போலீசாரை பார்த்ததும் சுவர் ஏறிகுதித்து தப்பியோடினர்.  பின்னர் போலீசார் அந்த அரிசி ஆலையை பூட்டு போட்டு மூடினர்.  மேலும் அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர்.  போலீசார் விரட்டியடித்ததால் டோக்கன் பெற்ற பலர் அரிசி கிடைக்காத ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

அதேபோல் ஆரணி, மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய விடிய வாக்காளர்களுக்கு மாவட்ட கவுன்சிலர் ஓட்டுக்கு ₹200 முதல் ₹300 வரையிலும், ஒன்றிய கவுன்சிலர் ஓட்டுக்கு ₹300 முதல் ₹500 வரையிலும், ஊராட்சி மன்ற தலைவர் ஓட்டுக்கு ₹500, ₹1000, ஒரு மூட்டை அரிசி, சேலை, கட்டில், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசு பொருட்களும் விநியோகம் செய்யப்பட்டது. சாத்தூரில் கடை மூடல்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கத்தாளம்பட்டி ஊராட்சியில் நேற்று இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இங்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சாமியார் காலனியை சேர்ந்த லட்சுமி முருகேசன் என்பவர் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இவரது கணவர் முருகேசன் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு பாஜ சார்பில் போட்டியிடுகிறார். இவர் கத்தாளம்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட அம்மாபட்டி பகுதி மக்களுக்கு தனக்கும், மனைவிக்கும் வாக்களிக்க கோரி 25 கிலோ அரிசி பைக்கான டோக்கன்களை நேற்று வழங்கியதாக கூறப்படுகிறது. டோக்கன்களை வாங்கிய மக்கள் சாத்தூரில் உள்ள ஒரு அரிசி கடையில் மொத்தமாக திரண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அரிசி கடையை பூட்டினர். கடை உரிமையாளரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

தூத்துக்குடி அருகே போலீசார் தடியடி
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் ஊராட்சி மன்ற தேர்தலையொட்டி குளத்தூர் கிழக்கு பகுதி வேத கோவில் தெரு டிஎன்டிடிஏ பள்ளியில் 6வது வார்டு வாக்காளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த 137ம் நம்பர் பூத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. இதையொட்டி வாக்காளர்களிடம் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாக்கு சேகரித்தனர். போலீசார் கண்டித்த போதும் அவர்கள் போகவில்லை. இதனால் ஆவேசமடைந்த போலீசார், மாலை 4 மணியளிவில் தடியடி  நடத்தி விரட்டி அடித்தனர். இதில் பலருக்கு காயம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி பொதுமக்கள் போலீசாரை கண்டித்து அங்குள்ள வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகளும், போலீசாரும் அவர்களை சமரசப்படுத்தினர்.

Tags : voter ,district ,Thiruvannamalai ,drive ,police chase , 25kg, rice for voter , Thiruvannamalai district, wall mounted ,police chase
× RELATED இளம் வாக்காளர்களை செல்போனில் தொடர்பு...