×

ஓட்டப்பிடாரம் அருகே தேர்தல் மோதல் திமுக ஆதரவாளர் கல்லால் அடித்துக் கொலை: 5 பேருக்கு வெட்டு, கடைகள் அடைப்பு

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே உள்ளாட்சி தேர்தல் மோதலில் திமுக ஆதரவாளர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். மேலும் தந்தை, மகன் உள்ளிட்ட 5 பேருக்கு வெட்டு விழுந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் ஓட்டப்பிடாரம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓட்டப்பிடாரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு  முன்னாள் பஞ்சாயத்து தலைவர் லதா, முப்புலிவெட்டியைச் சேர்ந்த இளையராஜா, அதே பகுதியைச் சேர்ந்த கோசி மணி ஆகிய 3 பேர் போட்டியிட்டனர். இதில் இளையராஜா தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர். இதையொட்டி அவர்களது ஆதரவாளர்கள்  கடந்த சில நாட்களாக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டு பச்சேரி பகுதி அரசு பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் ஓட்டுப்பதிவில் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து  தலைவர் பதவிக்கு போட்டியிடும் லதாவின் கணவர் மாசானசாமி, அவரது சகோதரர் சோமசுந்தரம், சண்முகசுந்தரம் ஆகிய  3 பேருக்கும் சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது. அவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

  இந்நிலையில் ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனை அருகே, கிழக்குத் தெருவைச் சேர்ந்த ரேஸ் வண்டி மாரியப்பன் (60) மர்ம நபர்களால் கல்லால் அடித்து முகம் சிதைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் திமுகவை சேர்ந்த இளையராஜா ஆதரவாளர். தகவலறிந்து போலீசார், மாரியப்பனின் உடலை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே ஓட்டப்பிடாரம் நகர திமுக  செயலாளர் பச்சை பெருமாளும், அவரது மகன் ஜெயமுருகனும் வெட்டுக் காயங்களுடன்  தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட மோதலில் மாரியப்பன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. கொலை நடந்த இடத்தை நெல்லை சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபு பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த சம்பவங்கள் குறித்து ஓட்டப்பிடாரம்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  பஞ். தலைவர் தேர்தலில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால் கொலை, வெட்டுச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் போலீசார்  குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Election clash ,DMK ,supporter ,Ottapadram ,Ottapadam , Election clash, Ottapadam, DMK supporter, kills with stone
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு