×

பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.1000 ரொக்கப்பணம் ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொங்கல் பரிசுதொகுப்பு, ரூ.1000 ரொக்கப்பணம் வருகிற ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ₹1000 ரொக்க பணம் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும் என கடந்த மாதம் 26ம் தேதி அறிவித்தார். இதைத் தொடர்ந்து 29ம் தேதி ₹1000 பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதால் பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் சிலர் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் வரை பொங்கல் பரிசு வழங்க மாட்டோம் என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற ஜனவரி 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு மற்றும் ₹1000 ரொக்கப்பணம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் நேற்று அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்கள், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:
* 2020ம் ஆண்டு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ₹1000 மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
* இந்த பணியை ஜனவரி 9ம் தேதி முதல் தொடங்கி 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13-1-2020 அன்று பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க தொகை வழங்கி முழுமையாக முடிக்க வேண்டும்.n சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர், தூத்துக்குடி, ஈரோடு, தஞ்சாவூர், திண்டுக்கல், வேலூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொங்கல் பரிசை விரைந்து விநியோகம் செய்ய கூடுதல் பணியாளர்களை அமர்த்திட வேண்டும். கூட்டத்தை ஒழுங்குபடுத்த தேவைக்கேற்ப காவல் துறையினரின் உதவியையும் பெற்று பயன்படுத்த வேண்டும்.
* தெரு வாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்கான அட்டவணையை தயார் செய்து குடும்ப அட்டைதாரர்கள் நன்கு அறியும் வகையில் முன்கூட்டியே ரேஷன் கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.
* பொங்கல் பரிசு தொகுப்பும் மற்றும் ரொக்கத்தொகை ₹1000 ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும். இரண்டு 500 ரூபாய் தாள்களாக வெளிப்படையாக வழங்க வேண்டும். எக்காரணத்தை கொண்டும் ரொக்க பணத்தை கவரில் வைத்து வழங்கக் கூடாது.
* மின்னணு குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்ட்) மூலமாகத்தான் பொங்கல் பரிசு வழங்க வேண்டும். ஸ்மார்ட் கார்டு இல்லையென்றால் அந்த குடும்ப அட்டையில் உள்ள நபர்களில் ஏதேனும் ஒருவரின் ஆதார் அட்டையை வைத்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு வரும் “ஒருமுறை கடவுச்சொல்” அடிப்படையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம்.
* பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் ₹1000 வழங்கப்பட்டதும், குடும்ப அட்டைதாரர்களின் கைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். பொங்கல் பரிசு வழங்கியதை உறுதி செய்யும் வகையில், ஒப்புதல் படிவத்தில் கையெழுத்து வாங்க வேண்டும். குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வந்தாலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வரிசையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். ஆண்கள், பெண்கள் தனியாக வரிசையில் நின்று பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.
* அரசின் இந்த திட்டம் முறையாக சென்றடைவதை கண்காணிக்க வட்ட அளவில் துணை ஆட்சியில் நிலை அலுவலர்கள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும். இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்த முன்னேற்றத்தை மாவட்ட ஆட்சி தலைவர்கள் தினமும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள இந்த திட்டத்தின் மூலம் பெறும் 2.5 கோடி அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதற்காக, தமிழக அரசு ₹2,363 கோடி நிதியும்  ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Government of Tamil Nadu , Pongal Gift,Package, Rs.1000 cash ,prize ,issued from January 9 , 13, Government announces
× RELATED தமிழ்நாடு அரசின் 108 கட்டுப்பாட்டு...