×

நிதி ஆயோக் பட்டியல் வெளியீடு தமிழகத்துக்கு 3வது இடம்: முதல் இடத்தை தக்கவைத்தது கேரளா

புதுடெல்லி: நிலையான வளர்ச்சி இலக்கு தொடர்பான நிதி ஆயோக் தர பட்டியலில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் 3வது இடத்தில் உள்ளன. கேரளா தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. ‘நிதி ஆயோக், நிலையான  வளர்ச்சி இலக்கு - 2019’ பட்டியலை நேற்று வெளியிட்டது. சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மதிப்பீடு செய்து, தர வரிசையை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் கேரளா 70 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டும் இந்த மாநிலம் 69 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருந்தது.  இமாச்சலப் பிரதேசம் 69 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்கள் 67 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை வறுமையின்மையில் 72 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. ஆனால் பசியின்மையில் 10வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. உடல்நலம் (76 புள்ளி) 2வது இடம், கல்வித்தரம் (70 புள்ளி) 4வது இடம், பாலின சமநிலை 12வது இடம், சுத்தமான குடிநீர் 7வது இடம், எரிசக்தி 4வது இடம், பணி மற்றும் பொருளாதார வளர்ச்சி 6வது இடம் பிடித்துள்ளது.

தொழில்துறை, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் உள்கட்டமைப்பில் 14வது இடத்தில் உள்ளது. சமநிலையின்மையை குறைப்பதில் 16வது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு, ஒட்டு மொத்த அடிப்படையில் தமிழகம் 66 புள்ளிகள் பெற்றிருந்தது.    யூனியன் பிரதேசங்களில் சண்டிகார் 70 புள்ளிகளுடன் முதல் இடம் பெற்றுள்ளது. புதுச்சேரி 66 புள்ளிளுடன் 2ம் இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் அதிகபட்ச வளர்ச்சியை எட்டியுள்ளன. ஆனால், குஜராத் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றம் காணப்படவில்லை. பீகார், ஜார்க்கண்ட், அருணாசல பிரதேசம் ஆகியவை திறன் அடிப்படையில் மிக மோசமான மாநிலங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. கடைசி மூன்று இடங்களை பெற்றுள்ளன.  இதுகுறித்து நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் கூறுகையில், ‘‘உடல்நலம், சுகாதாரம் அடிப்படையில் தென்மாநிலங்கள் சிறப்பான பங்கை ஆற்றியுள்ளன’’ என்று கூறியுள்ளார். இந்தியா ஒட்டு மொத்த அளவில் 60  புள்ளிகள் பெற்று, கடந்த ஆண்டை விட 3 புள்ளி முன்னேற்றம் அடைந்துள்ளது. நீர், சுகாதாரம், தொழில்துறை மற்றும் புதுமை கண்டுபிடிப்புகள் போன்றவற்றால் இந்த முன்னேற்றம் சாத்தியம் ஆகியுள்ளது. அதேநேரத்தில், ஊட்டச்சத்து மற்றும் பாலின சமநிலையின்மை பெரிய பிரச்னையாக நீடித்து வருகிறது. இவற்றில் அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என நிதி ஆயோக் சுட்டிக்காட்டியுள்ளது.

Tags : Kerala ,Thiruvananthapuram , Thiruvananthapuram,Kerala,retained ,first place
× RELATED கடந்த 10 வருடங்களில் எத்தனை...