×

செல்லாத நோட்டுகளில் வாங்கிய சொத்து எது? சிறையில் இருந்தபடியே கடிதம் மூலம் உறவினருக்கு தகவல்களை தெரிவித்த சசிகலா: வருமான வரித்துறை பிடியில் சிக்கிய ஆவணங்கள்

சென்னை: பண மதிப்பிழப்பு நேரத்தில் தங்களிடம் இருந்த பணத்தை வைத்து தமிழகத்தில் வாங்கிய சொத்து பட்டியலை சிறையில் இருந்தபடியே மறைந்த ஜெயலலிதாவின் தோழி சசிகலா சென்னையில் உள்ள உறவினருக்கு கடிதம் மூலம் தெரிவித்த தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கடந்த 2016 நவம்பர் மாதம் பாஜக அரசு பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை அறிவித்தது. அதன் மூலம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாத நோட்டுக்களாக அறிவிக்கப்பட்டன. இந்த நேரத்தில் சசிகலா தன்னிடம் உள்ள செல்லாத பணத்தை பயன்படுத்தி ரூ.1,674 கோடிக்கு பல்வேறு சொத்துகளை வாங்கியதாகவும், ரூ.237 கோடி அளவுக்கு கடன் வழங்கியதாகவும் வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது.  குறிப்பாக ஷாப்பிங் மால்கள், ரிசாட்டுகள் என கோடிக்கணக்கில் சொத்துகளை பணமதிப்பிழப்பு நேரத்தில் சசிகலா வாங்கியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா சட்டவிரோதமாக சொத்துக்களை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது. செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து வாங்கிய விவரங்கள், அது தொடர்பான துண்டு சீட்டுகள் வருமான வரித்துறையினர் சசிகலா உறவினர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தியபோது கிடைத்துள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது சொத்து வாங்கும் நடவடிக்கைகளை சசிகலா தொடங்கியதாக தெரியவந்துள்ளது. சசிகலாவின் அண்ணி இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் வீட்டில் கடந்த 2017 நவம்பரில் வருமான வரித்துறையினர் மேற்கொண்டபோதுதான் சசிகலா புதிதாக பல்வேறு சொத்துகளை வாங்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அங்கு நடந்த சோதனையில் சசிகலா கைப்பட எழுதிய கடிதமும் வருமான வரித்துறையிடம் சிக்கியது. அவர் வாங்கிய பல சொத்துகள் செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி வாங்கியதும் தெரியவந்தது. இது தொடர்பாக சசிகலாவின் சட்ட ஆலோசகர் வக்கீல் செந்தில் உள்ளிட்டோரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.  

 விசாரணையில், சசிகலா செல்லாத நோட்டுக்களை பயன்படுத்தி சொத்து வாங்கியது உறுதிபடுத்தப்பட்டது. சோதனையில் சிக்கிய கடிதத்தில் உள்ள கையெழுத்தும் சசிகலாவின் கையெழுத்துதான் என்றும் வக்கீல் செந்தில் உறுதிபடுத்தினார். இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டது தொடர்பாக சொத்து குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா அங்கிருந்தபடியே தனது கைப்பட எழுதியதுதான் அந்த கடிதம்.  பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா செப்டம்பர் 2017ல் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். அதில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளன என்ற விவரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுபற்றி வருமான வரித்துறையினர், விவேக் ஜெயராமனிடம் கேட்ட போது, இந்த கடிதத்தை 2 மாதத்துக்கு முன்பு யாரோ ஒரு நபர் எனது வீட்டு வாசலில் இருந்த காவலாளியிடம் கொடுத்து விட்டு சென்றுள்ளார். காவலாளி அதை என்னிடம் கொடுத்தார். அதை நான் வீட்டில் வைத்திருந்தேன் என்று கூறினார்.

 எந்த காவலாளி கொடுத்தார் என்று விவேக்கிடம் கேட்டதற்கு வீட்டில் 2 காவலாளிகள் இருக்கிறார்கள். அதில் யார் கொடுத்தார் என்று தெரியாது என்று பதிலளித்துள்ளார்.  அப்படியானால் எந்த தேதியில் அந்த கடிதம் வந்தது என்பதை வைத்து அப்போது பணியில் இருந்த காவலாளியிடம் விசாரிக்கலாம் என்று வருமான வரித்துறையினர் விவேக் ஜெயராமனிடம் கேட்டதற்கு தனக்கு தேதி தெரியாது என்று கூறிவிட்டார். வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் ஏன் கடிதத்தை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, அந்த கடிதம் தொடர்பாக சசிகலாவிடம் நான் பேச வேண்டும் என்பதற்காகத்தான் வைத்திருந்தேன் என்று பதிலளித்துள்ளார். இது தொடர்பாக வக்கீல் செந்திலிடமும் வருமான வரித்துறையினர் விரிவாக விசாரணை நடத்தி உள்ளனர். அதுபற்றி செந்தில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கூறியபோது, ஜெயலலிதா மரணம் அடைவதற்கு சில நாட்களுக்கு முன்பு செல்லாத பணத்தை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்குவது தொடர்பாக என்னிடம் சில தகவல்களை சசிகலா கூறினார். அதில் உள்ள விவரங்கள் தான் கடிதத்தில் இருக்கின்றன.

 என்னை தனது வீட்டில் சந்திக்க வருமாறு 2017 செப்டம்பர் மாதம் இறுதியில் விவேக் ஜெயராமன் அழைத்தார். அவரை அவரது வீட்டில் சந்தித்தபோது சசிகலாவின் கடிதத்தை விவேக் ஜெயராமன் காட்டினார்.   அப்போது, 2016 டிசம்பர் மாதம் சசிகலா தன்னிடம் ஒரு கவர் கொடுத்திருந்தார். அந்த கவரை சசிகலா பரோலில் வரும்போது அவரிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்றும் என்னிடம் விவேக் ஜெயராமன் கூறினார். அந்த கவரை 2017 அக்டோபர் 8ம் தேதி சசிகலாவை நான் நேரில் சந்தித்தபோது அதை அவரிடம் கொடுத்துவிட்டேன் என்று வக்கீல் செந்தில் கூறியுள்ளார். செல்லாத நோட்டை பயன்படுத்தி சசிகலா வாங்கிய சொத்துக்கள் பற்றிய விவரங்கள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அதன் அடிப்படையில் சசிகலாவுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீசை அனுப்பியுள்ளனர். அந்த நோட்டீசில்,  பணமதிப்பிழப்பு நேரத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நோட்டுகளை பயன்படுத்தி கோடிக்கணக்கில் தமிழ்நாடு முழுவதும் சொத்துகளை வாங்கி உள்ளீர்கள். இதற்கான ஆதாரங்கள் உள்ளன. இது குறித்து விளக்கம் தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.பண மதிப்பிழப்பு நேரத்தில் கோடிக்கணக்கில் சொத்துக்களை வாங்கி குவித்த சசிகலா அது தொடர்பாக தன் கைப்பட எழுதிய கடிதம் கிடைத்துள்ளதால் அவருக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags : Sasikala ,jail ,relatives , property purchased,invalid notes,Sasikala disclosed,letter ,jail,Income tax department
× RELATED பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு..!!