×

பாஜவை தனிமைப்படுத்துங்கள்: கட்சிகளுக்கு மம்தா அழைப்பு

புருலியா:  பாஜவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள், மக்கள் சமுதாயம் ஒன்றிணைய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு மாநிலங்களிலும் பல்வேறு வகையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக பேரணிகளை நடத்தி வருகின்றார். நேற்றும் புருலியா நகரில் 6வது முறையாக 5 கி.மீ. தொலைவு பேரணி முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் நடந்தது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மம்தா, “குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராடுபவர்கள் தேசவிரோதிகள் என்பது போன்ற முத்திரையை உருவாக்குவதற்கு பாஜ அரசு முயற்சித்து வருகின்றது.

சட்டரீதியான குடிமக்களின் குடியுரிமையை பாஜ பறிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. அனைத்து இடத்திலும் பாஜவை தனிமைப்படுத்த அரசியல் கட்சிகள் உட்பட அனைவரும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறும்வரை எனது போராட்டத்தை நிறுத்த மாட்டேன்” என்றார்.இதற்கிடையே, கொல்கத்தாவில் நேற்று இந்து துறவியர்கள் சார்பிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து மயோ சாலையில் உள்ள காந்தி சிலை முன்பு போராட்டம் நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட துறவிகள் கலந்து கொண்டு, இச்சட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

Tags : Mamata ,Baja ,parties , Isolate ,Baja: Mamata calls, parties
× RELATED மம்தா நலம்: மருத்துவர்கள் தகவல்