×

பாகன் குடும்பத்தினருடன் வீடியோகால் கள்ளழகர் கோயில் யானை அசத்தல்

கோவை: கோவை அடுத்த மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 15ம் தேதி துவங்கியது. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 28 கோயில் யானைகள் பங்கேற்றுள்ளன. முகாம், பிப்ரவரி 2ம் தேதி வரை நடக்கிறது. யானைகள் முகாமை சுற்றி 24 மணி நேரமும் வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், முகாம் நடக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லித்துறை காப்புக்காட்டில் 23 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. மேலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டியூர் அருகே 2 காட்டு யானைகள் தனித்தனியாக முகாமிட்டு உள்ளன. ஒரு கூட்டத்தில் குட்டியுடன் கூடிய 22 யானைகளும், மற்றொரு கூட்டத்தில் 12 யானைகளும் உள்ளன. முகாமை சுற்றி மூன்று கூட்டமாக மொத்தம் 57 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன.

இந்த யானைகள், புத்துணர்வு முகாம் நடைபெறும் இடத்தில் நுழைவதை தடுக்க சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இக்குழுவினர் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர். யானைகள் ஆற்றை கடந்து வராமல் தடுக்கும் வகையில் 10 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர, முகாமை சுற்றி 6 இடங்களில் உயர்கோபுரம் அமைக்கப்பட்டு காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முகாமில் பங்கேற்றுள்ள கள்ளழகர் கோயில் யானை சுந்தரவள்ளி தாயார் யானை பாகன்கள் தங்களின் மனைவி, குழந்தைகளுடன் போனில் வீடியோகால் பேசினார். பின்னால், யானை இருந்தை பார்த்தவர்கள், யானையுடன் பேச வேண்டும் என கூறினர். அப்போது, பாகன் யானைக்கு முன்பு தனது செல்போனை கொண்டு சென்றார். போனில் பாகனின் குடும்பத்தினரை பார்த்த யானை உற்சாகமடைந்தது. யானையிடம் அவர்கள் புதிய இடம் எப்படி இருக்கு?, சாப்பாடு எப்படி?, நல்லா இருக்கியா? என கேட்டனர். இதைக்கேட்ட யானையும் அதை ஆமோதிப்பதுபோல் தலையை ஆட்டியது பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது.

Tags : Elephant
× RELATED காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்...