×

நாளை ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம்...பாதுகாப்பு பணியில் 15,000 போலீஸ்

சென்னை: ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சென்னையின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து  காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், 2020-ம் ஆண்டிற்கான புத்தாண்டு நல்வாழ்த்துக்களை சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும்  அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். முக்கியமாக புத்தாண்டு  கொண்டாட்டத்தின்போது மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனனர்.

மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரையில் புத்தாண்டு வரவைக் கொண்டாடுவதற்காக 31.12.2019 இரவு காமராஜர் சாலை மற்றும் பெசன்ட் நகர் சாலையில்  ஆயிரகணக்கான மக்கள் கூடுவார்கள். விபத்தில்லா புத்தாண்டை உறுதிசெய்ய காவல்துறை போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது. அதன்படி காமராஜர் சாலை,  ராஜாஜி சாலை, வாலாஜா சாலை, காந்தி சிலை, அடையார் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது அசம்பாவிதங்களைத் தவிர்க்க சென்னை முழுவதும் 15,000போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.  நாளை இரவு 9 மணியில் இருந்து சென்னையில் முக்கிய இடங்களில் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூர்,  கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, அடையாறு, தி.நகர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, மாதவரம், அம்பத்தூர் உள்ளிட்ட 368 இடங்களில் வாகனதணிக்கை குழுக்கள்  அமைக்கப்பட உள்ளது. மெரினா,காமராஜர் சாலையில் உதவி மைய கூடாரங்கள் அமைக்கப்பட்டு ட்ரோன்மூலம் கண்காணிக்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 சாலை பாதுகாப்பு குழுக்களுடன் சேர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பைக் ரேஸ், வாக ரேஸிங்,  மதுபோதையில் தகராறு ஆகியவற்கைக் கண்காணித்துத் தடுக்கும் பணியிலும் காவலர்கள் ஈடுபடவுள்ளனர். சென்னையில் முக்கிய கோவில்களிலும்,  தேவாலயங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கடற்கரையில் புத்தாண்டு கொண்டாடும் போது கடலுக்குள் பொதுமக்கள்  செல்லாமல் இருக்க தடுப்பு வேலிகள் அமைப்பட்டுள்ளது, உயர் கோபுரங்கள் கொண்டு கண்காணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுபோதையில்  வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவது மட்டும் அள்ளாமல் குற்றப்பிரிவில் சேகரிக்கப்பட்டு, பாஸ்போட் மற்றும் விசா பெறும் போது  அதனை கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகனங்கள் பார்கிங் செய்ய சேப்பாக்கம் ரயில் நிலையம், ரானி மேரி கல்லூரி  உள்ளிட்ட 12 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு  தரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.  



Tags : Chennai ,New Year Celebration: Traffic Transfer on Main Roads , English New Year Celebration: Traffic Transfer on Main Roads in Chennai ...
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...