×

முப்படைகளின் தலைமை தளபதி: ராணுவ தளபதி பிபின் ராவத் நியமனம் செய்யவுள்ளதாக தகவல்?

டெல்லி: முப்படைகளுக்கு தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு விவகாரங்களுக்கான  மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு பின்,  மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா், செய்தியாளா்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவா் கூறியதாவது:

முப்படை தளபதி பதவியை உருவாக்க, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்படி, பாதுகாப்பு  அமைச்சகத்தின்கீழ் ராணுவ விவகாரங்கள் துறை உருவாக்கப்படும். அந்த துறைக்கு, முப்படை தளபதி தலைமை வகிப்பார். முப்படை தளபதி பதவிக்கு  நியமிக்கப்படுபவர் 4 நட்சந்திர அந்தஸ்து பெற்ற ராணுவ ஜெனரலாக இருப்பார்.

அவரது ஊதியம், மூன்று படைகளின் தலைமை தளபதிகளுக்கு நிகராக இருக்கும் என்று பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தார். இதனையடுத்து, முப்படை தலைமை  தளபதி பதவிக்கு, தற்போதைய ராணுவ தளபதி பிபின் ராவத் நியமிக்கப்படுவார் என கூறப்பட்டது. ராணுவ தளபதியான அவரின் பதவிக்காலம் வரும் டிசம்பர் 31ம்  தேதி நாளையுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில், தற்போது உள்ள ராணுவ தளபதி பிபின் ராவத் முப்படைகளுக்கு தலைமை தளபதியாக நியமனம்  செய்யப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முப்படை தளபதி பதவி உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை, கடந்த சுதந்திர தின உரையின்போது, பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தார்.  இதைத்தொடா்ந்து, முப்படை தளபதி நியமனத்துக்கான நடைமுறை, அவருக்கான பொறுப்புகள் ஆகியவற்றை இறுதி செய்வதற்காக தேசிய பாதுகாப்பு ஆலோசகா்  அஜித் தோவல் தலைமையில் ஓர் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் அறிக்கைக்கு, பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு  ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

கடந்த 1999-ஆம் ஆண்டில் பாகிஸ்தானுடன் நிகழ்ந்த கார்கில் போருக்கு பிறகு, முப்படைகளின் ஒருங்கிணைப்பில் உள்ள இடைவெளிகள் குறித்து ஆராய ஓா்  உயா்நிலை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவானது, முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தது. இதேபோல்,  தேசிய பாதுகாப்பு அமைப்புமுறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீா்திருத்தங்கள் தொடா்பாக ஆராய அமைக்கப்பட்ட அமைச்சா்கள் குழுவும் இந்த யோசனையை  ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.



Tags : Bipin Rawat ,Army ,Commander-in-Chief , Commander-in-Chief of Army: Army Commander Bipin Rawat to be appointed?
× RELATED தேச பக்தி பற்றி மோடி எங்களுக்கு பாடம்...