திருவண்ணாமலை: ஆன்மிக நகராம் திருவண்ணாமலையில் 39 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி துர்நாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கொசுத்ெதால்லையினால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சில இடங்களில் கழிவுநீர் கால்வாய் இருக்கும் இடமே தெரியவில்லை. தூர்ந்து போய் உள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை தேனிமலை ராதாபாய் நகரில் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுவது மட்டுமின்றி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் கொசுத்தொல்லையால் கடுமையாக அவதிப்படுகின்றனர்.
கடந்த 3 மாதங்களாகவே இந்த கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் ஆறாக ஓடுவதால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் சிரமப்படுகின்றனர். இதுகுறித்து, பொதுமக்கள் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கலெக்டரிமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் தெரிவித்தும் இன்னும் அதிகாரிகள் இதில் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்களுக்கு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர் செய்ய வேண்டும். கழிவுநீர் சாலையில் செல்வதை தடுக்க வேண்டும், கழிவுநீர் கால்வாயில் தடையின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.