×

பேரணாம்பட்டு பகுதியில் மக்கள் பீதி: விவசாய நிலத்தில் புகுந்து 7 யானைகள் அட்டகாசம்.... வாழை, நெற்பயிர், வெற்றிலை தோட்டம் நாசம்

பேரணாம்பட்டு: பேரணாம்பட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் நேற்று முன்தினம் இரவு புகுந்த 7 யானைகள் அட்டகாசம் செய்து வாழை, நெற்பயிர், தக்காளி, வெற்றிலை தோட்டங்களை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம், மதினாபல்லி கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு 7 யானைகள் புகுந்தது. பின்னர், கிராமத்தில் இருந்த விவசாய நிலங்களை சேதப்படுத்தியது. இதில், மசிகம் கிராமத்தை சேர்ந்த தேவன்(70) என்பவருக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடிகள் மற்றும் அரை ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள கேந்தி பூக்கள் என ஒரு ஏக்கர் விவசாய பயிர்களை சேதப்படுத்தியது.

அதே கிராமத்தை சேர்ந்த ஜோதிராமலிங்கம்(40) என்பவருக்கு சொந்தமான 20 வாழை மரங்களை சேதப்படுத்தியது. இதேபோல், வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான 1 ஏக்கர்  அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிரை சேதப்படுத்தியது. மேலும், பாலூர் கிராமத்தை சேர்ந்த சேட்டு விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்து ₹1 லட்சம் செலவு செய்து 2.15 ஏக்கரில் வெற்றிலை தோட்டம் அமைத்திருந்தார். இதையும் அந்த யானை கூட்டம் சேதப்படுத்தியது. தொடர்ந்து கிராம பகுதியில் உள்ள நிலங்களை சேதப்படுத்திவிட்டு அருகில் இருந்த காப்புக்காட்டிற்குள் சென்றுவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து வருகின்றனர். ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்து வந்த யானைக்கூட்டம் தற்போது பேரணாம்பட்டு பகுதிக்கு வந்திருப்பது அப்பகுதி மக்களை பீதியடைய செய்துள்ளது.

Tags : Peranampattu ,area ,farmland , Pernampattu, elephants pump
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...