×

குளத்தூர் அருகே உருக்குலைந்த சாலையால் 4 கிராம மக்கள் கடும் அவதி

குளத்தூர்: குளத்தூர் அருகே முத்துக்குமரபுரத்தில் இருந்து எப்போதும்வென்றான் செல்லும் சாலை பராமரிப்பின்றி உருக்குலைந்துள்ளது. இதனால் 4 கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே முள்ளூர் கிராம பஞ்சாயத்தில் முள்ளூர், முத்துக்குமரபுரம், அய்யர்பட்டி என 3 கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதேபோல் அருகேயுள்ள மிளகுநத்தம் தனி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராம பகுதியில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோனோர் விவசாயிகள். மற்றவர்கள் அருகேயுள்ள குளத்தூர், தூத்துக்குடி, எப்போதும் வென்றான், குறுக்குச்சாலை, எட்டயபுரம், கோவில்பட்டி பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இங்குள்ள கிராமங்களில் துவக்கப்பள்ளி மட்டுமே உள்ளதால், சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உயர்கல்வி பயில நகரங்களுக்குத்தான் சென்றுவர வேண்டியுள்ளது.

இவர்களுக்கு குளத்தூர்   அருகே முத்துக்குமரபுரம் கிராமத்தில் இருந்து முள்ளூர், அய்யர்பட்டி,   மிளகுநத்தம் கிராமம் வழியாக எப்போதும் வென்றான் செல்லும் சாலை மிகவும் பயன்பாடாக இருந்து வந்தது. இருப்பினும் சுமார் 10 கி.மீ. தொலைவிலான  இச்சாலை கடந்த பல ஆண்டுகளாக   சீரமைக்கப்படாமல் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சிதிலமடைந்து   போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலைக்கு மாறிவிட்டது. இச்சாலையையொட்டியுள்ள   கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்களது தேவைக்கான பொருட்கள் வாங்கவும்   மற்றும் விவசாய பொருட்கள் வாங்கவும் கோவில்பட்டி, குளத்தூர், தூத்துக்குடி பகுதிகளுக்கு செல்ல இச்சாலையைத்தான் அதிகம் உபயோகித்து வந்தநிலையில் இந்த பயணத்தை பாதிக்கும் விதமாக பராமரிப்பின்றி முற்றிலும் சிதிலமடைந்து உள்ளது. தற்போது இப்பகுதியில் விவசாய பணிகள் அதிகமாக நடந்து வருவதால்   விவசாயத்திற்கு தேவையான பொருட்கள் மற்றும் கூலி வேலைக்கான ஆட்களை அழைத்துச்   செல்வதில் பெரும் சிரமமாகவே உள்ளது.

இச்சாலையில் அமைக்கப்பட்ட பாலங்களிலும்   அரிப்பு ஏற்பட்டு 4 சக்கர வாகனங்கள் செல்வதில் சிரமம் உள்ளது. மேலும் இந்த கிராமங்களுக்கு அரசு பஸ்கள் மட்டுமின்றி, மினி பஸ்களும் இயக்கப்படாததால் மக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். இந்த கிராம மக்கள் மட்டுமின்றி, வீரபாண்டியபுரம், கொல்லம்பறம்பு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் அப்பகுதிகளுக்கு செல்லும் போது கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஓட்டப்பிடாரம் ஒன்றிய அதிகாரிகளுக்கு பலமுறை மனுக்கள் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கைகளும் இல்லை. எனவே, இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதி   கிராமத்தை சேர்ந்தவர்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

Tags : road ,Klathoor , Klathoor, distorted road
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை