×

'நேர்மை, நியாயத்துடன் நடந்து கொள்ளுங்கள் ' : குறுகிய கால அவகாசம் உள்ளதால் வீடியோ பதிவு செய்வது சாத்தியமில்லை என்ற தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் கருத்து

மதுரை : இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது என்று உயர்நீதிமன்ற  மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை வீடியோ செய்ய கோரிய வழக்கில் நீதிமன்றம் இந்த கேள்வியை முன்வைத்துள்ளது.

வாக்கு எண்ணிக்கையை வீடியோ செய்ய கோரிய வழக்கு

ஊரக உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்  அறிவித்தது. அதன் அடிப்படையில் முதல் கட்ட தேர்தல் வெள்ளிக்கிழமை நடந்தது. 2ம் கட்ட தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த  நிலையில் வாக்கு எண்ணிக்கையில் ஆளும்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. எனவே, வாக்கு எண்ணிக்கையில் வெளிப்படைத்  தன்மையை உறுதி செய்ய வாக்கு எண்ணிக்கையை முழுவதும் வீடியோ பதிவு செய்து அதை வெளியில் இருப்பவர்களுக்கு ஒளிபரப்பு செய்ய  வேண்டும் எனக்கோரி சிவகங்கையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி முறையீடு செய்தார்.

விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவு


இந்த மனு நீதிபதிகள் வேலுமணி, தாரணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வாக்கு  எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று ஏற்கனவே விதிமுறைகள் உள்ளதாக சுட்டிக் காட்டினர். விதிமுறைப்படி வாக்கு  எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர் . இதையடுத்து  மாநில தேர்தல் ஆணையம் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகும்வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், குறுகிய கால அவகாசம் உள்ளதால் தனித்தனியாக வீடியோ பதிவு செய்வது சாத்தியமில்லை  என்றும் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்தார். இதனை கேட்ட  நீதிபதிகள், இரண்டரை நாட்கள் அவகாசம் உள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கையை ஏன் வீடியோ பதிவு செய்ய முடியாது என்று கேள்வி எழுப்பிய  நிலையில், தன்னிச்சை அமைப்பான தேர்தல் ஆணையம் நேர்மை, நியாயத்துடன் நடக்க வேண்டும் என்று கூறி வீடியோ பதிவு தொடர்பாக தமிழக  தலைமை தேர்தல் ஆணையர் தரப்பில் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க தேர்தல் ஆணைய வழக்கறிஞருக்கு உத்தரவு பிறப்பித்தனர்.


Tags : Icort ,EC ,Election Commission , Voting Count, Video Record, Madurai Branch, High Court, Election Commission
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...