×

சிராவயல் மஞ்சுவிரட்டில் இந்தமுறை... கலக்கப் போறான் சார் இந்த ‘காளி’: சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து தயார்படுத்துகிறார் பெண்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பகுதியில் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளையர்களோடு மல்லுக்கட்ட காளை ‘காளி’யை ஒரு பெண் தயார் படுத்தி வருகிறார். பொங்கல் பண்டிகையையொட்டி  சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு மற்றும்  மஞ்சுவிரட்டு  நடைபெறும். அதனால் பொங்கல் பண்டிகையை கிராமத்தினர் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர். ஜல்லிக்கட்டு என்றதும் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் நினைவிற்கு வருவதைப் போல தென்மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு என்றவுடன் நினைவுக்கு வருவது சிராவயல் தான்.

சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ள சிராவயலில், தை திங்கள் 3ம் நாளில் மஞ்சுவிரட்டு நடைபெறும். இங்கு சுமார் 300  ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டு வருகிறது. உலகிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு சுமார் 80 ஏக்கர் இடம் மஞ்சுவிரட்டிற்காக பொட்டலாக விடப்பட்டுள்ளது. இதேபோன்று கண்டுப்பட்டி, எம்.புதூர், நெடுமரம் புதூர், அரளிப்பாறை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் மஞ்சுவிரட்டுகளும் பெயர் பெற்றவை. இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்க கொம்பு முளைத்த காளைகளும், மீசை வைத்த காளையர்களும் போட்டிபோட்டுக் கொண்டு தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு மத்தியில் சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே கக்காட்டிருப்பைச் சேர்ந்த  சங்கீதா (35) என்ற பெண் தனது காளை காளியை ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிக்காக தயார் செய்து வருகிறார்.

அவர் கூறுகையில், ``எனது காளைக்கு காளி என்று பெயர் வைத்து பிள்ளை போன்று வளர்த்து வருகிறேன். எனது இரு மகள்களுடன், மூன்றாவது மகனாக காளியும் உள்ளது. மஞ்சுவிரட்டிற்காக  சிறுவயதிலிருந்தே நீச்சல் பயிற்சி, நடை பயிற்சி, பாய்ச்சல் பயிற்சி உள்ளிட்டவை கற்றுத்தருகிறோம். முதலில் உள்ளுர் மற்றும் அருகில் உள்ள ஊர்களில் நடக்கும் மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்க வைப்போம். அதனை தொடர்ந்து பெரிய மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்க விடுகிறோம். காளி பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  எத்தனை கிலோ மீட்டர் தூரத்தில் மஞ்சுவிரட்டு நடந்தாலும் நடந்து சென்ற பாதையை மனதில் ஞாபகமாக வைத்து காளி வீடு திரும்பி வந்துவிடும். அது வீடு திரும்பும் வரை விரதமாக குடும்பத்தில் அனைவரும் சாப்பிடாமல் இருப்போம். காளி வந்தவுடன் ஆரத்தி எடுத்து பச்சரிசியுடன் வெல்லம் கலந்து அதை வரவேற்போம்’’ என்றார்.

இதேபோன்று கக்காட்டிருப்பைச் சேர்ந்த காளை உரிமையாளர் சாந்தமூர்த்தி கூறுகையில், ``நான் சென்னையில் தொழில் செய்து வருகிறேன். எங்களிடம் இரண்டு மஞ்சுவிரட்டு காளைகள் உள்ளன. எங்கள் கிராமப்பகுதிகளில் எங்கு மஞ்சுவிரட்டு நடைபெற்றாலும் சென்னையில் இருந்து நான் சிவகங்கை மாவட்டத்திற்கு வந்துவிடுவேன். எங்கள் கிராமங்களில் கவுரவத்திற்காக மஞ்சுவிரட்டு மாடுகளை வளர்த்து
வருகிறோம்’’ என்றார்.

சத்தான உணவோடு கொஞ்சம் இஞ்சிச்சாறு
திருப்புத்தூர் பகுதிகளில் உள்ள மஞ்சுவிரட்டு காளைகளுக்கு  கடந்த சில வாரங்களாக  வெல்லம்,  பச்சரிசி, பருத்திக்கொட்டை, புண்ணாக்கு, கோதுமை தவிடு, பாசி உமி,  பேரிச்சம்பழம், கத்திரிக்காய், குளுக்கோஸ் போன்ற சத்தான உணவு வகைகள்  கொடுக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் வேகமாக  ஓடும்போது இளைப்பு வராமல் இருக்க இஞ்சி சாரும், வேகமாக ஓடுவதற்காக நீச்சல்  பயிற்சியும், கொம்புகளால்  மண்ணை குத்தும் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வேகமாக  ஓடும்போது கற்கள், முட்களால் கால்களில் காயம் ஏற்படாமல் இருக்க காளைகளுக்கு லாடம் கட்டப்படுகிறது.

Tags : Siravayal Manjuroot ,Sir ,female ,training , Siravayal yellow feather, bull, female
× RELATED சார் பதிவாளர் அலுவலகத்தில்...