×

தமிழக இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் விறுவிறு வாக்குப்பதிவு: பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்ற வண்ணம் வாக்களிப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் 27 மற்றும் 30ம் தேதி இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கி கடந்த 16ம் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த பட்டியல் படி 18 ஆயிரத்து 570 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 2 லட்சத்துக்கு 31 ஆயிரத்து 890 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர். முதல்கட்டமாக கடந்த 27ம் தேதி 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள  45,336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் பல்வேறு இடங்களில் ஏராளமான குளறுபடிகள் நடைபெற்றன. இந்நிலையில் 158 ஊராட்சி ஒன்றிங்களில் இன்று 2-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4,924 கிராம ஊராட்சி தலைவர், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களை உள்ளிட்ட 38,916 பதவிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 27 மாவட்டங்களிலுள்ள 46 ஆயிரத்து 639 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. பாதுகாப்பு பணியில் போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள் 61 ஆயிரம் பேர் பாதுகாப்பு ஈடுபட்டுள்ளனர்.
காலை 7 மணி முதல் 5 மணி நடைபெறும் வாக்குப்பதிவில் 1.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்நிலையில், தங்கள் ஜனநாயக கடமையாற்ற பொதுமக்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த வண்ணம் உள்ளனர். இளைஞர்கள், மற்றும் இளம்பெண்களும் ஆர்வத்துடன் வாக்களித்த வண்ணம் உள்ளனர்.

மறுவாக்குபதிவு:


திருவள்ளூரில் வாக்குப்பெட்டி எரிக்கப்பட்ட கடம்பத்தூர் ஒன்றியம் பாம்பரம்பாக்கத்தில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்காளர்களுக்கு ஏற்கனவே இடது கை ஆள்காட்டி விரலில் மை வைத்ததால் தற்போது நடுவிரலில் மை வைக்கப்படுகிறது. வாக்குச்சீட்டை மாற்றி வழங்கியது, சின்னங்களை மாற்றி அச்சடித்தல் உள்ளிட்ட காரணகளால் மறுவாக்குபதிவு நடைபெறுகிறது. தஞ்சாவூரில் முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தலில்போது தேர்தல் ரத்தான இடங்களில் மறுவாக்குபதிவு நடந்து வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் 21-ம் வார்டுக்கு உட்பட்ட 9 வாக்குச்சாவடிகள் மற்றும் தருமபுரி, மதுரை சென்னகாரம்பட்டி  144 வது வாக்குச்சாவடியில் 8வது வார்டு உறுப்பினர் பதவிக்கு மறு வாக்குபதிவு நடந்து வருகிறது.  புதுக்கோட்டை விராலிமலை ஒன்றியம் 15 வது  வார்டுக்கு உட்பட்ட 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடக்கிறது. தருமபுரி அரூர் ஒன்றியம் சிட்லிங் ஊராட்சிக்குப்பட்ட 217 வது வாக்குச்சாவடிகளில் மறுவாக்குபதிவு நடக்கிறது.

வாக்குப்பதிவு நிறுத்தம்:

கடலூரில் விருதாசலம் ஒன்றியம் சாத்துகூடலில் 160,161,162 ம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் பலரது பெயர்கள் விடுபட்டுள்ளதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவை வாக்காளர்கள் புறக்கணித்தனர். ராமநாதபுரம் அருகே பெரியநேந்தல்,பந்தனேந்தல், சித்தனேந்தல் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் 800க்கும் மேற்பட்ட பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் கூறி தேர்தல் புறக்கணித்தனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் ஒக்கநாடு கீழையூரில் சின்னம் வரிசை மாறியதால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. 2-வது இடத்தில இருந்த திமுக சின்னம் 4 - வது இடத்துக்கு வந்ததால் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

2 ஆம் கட்ட உள்ளாட்சித்தேர்தலில் தமிழக அமைச்சர்கள் தலைவர்கள் சிலர் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியம் சிதம்பராபுரத்தில் உள்ள வாக்குச்சாவடியில் கடம்பூர் ராஜு வாக்களித்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூரில் சேவூர் ராமச்சந்திரன் தனது குடும்பத்தோடு வாக்களித்தார்.

தேர்தல் ரத்து:

விருதுநகர் வில்லிபத்திரி ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 1,3,5,7,9 வார்டுகளில் தேர்தல் ரத்து செய்யப்பட்டன. வேட்பாளர்களுக்கு வரிசைப்படி சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் 6 வார்டுகளில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டன.


Tags : Voting ,phase ,elections ,Tamil Nadu , Voting in the second phase of Tamil Nadu elections
× RELATED தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில்...