×

முதல் டெஸ்ட் போட்டி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது தென் ஆப்ரிக்கா: ரபாடா விக்கெட் வேட்டை

செஞ்சுரியன்: இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 107 ரன் வித்தியாசத்தில் வென்றது. சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் கடந்த 26ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது. தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 284 ரன் குவித்து ஆல் அவுட்டானது. டி காக் அதிகபட்சமாக 95 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 181 ரன் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்சை இழந்தது.

டென்லி 50, ஸ்டோக்ஸ் 35, கேப்டன் ரூட் 29, சாம் கரன் 20 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் பிலேண்டர் 4, ரபாடா 3, நோட்ஜே 2, பிரிடோரியஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். 103 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய தென் ஆப்ரிக்க அணி 272 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. அறிமுக வீரர் வாண்டெர் டஸன் 51, பிலேண்டர் 46, நோர்ட்ஜே 40, டி காக் 34, எல்கர் 22, கேப்டன் டு பிளெஸ்ஸி 20 ரன் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் 5 விக்கெட் கைப்பற்றினார். ஸ்டோக்ஸ் 2, ஆண்டர்சன், பிராடு, சாம் கரன் தலா 1விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 376 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன் எடுத்திருந்தது. சிப்லி29 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கை வசம் 9 விக்கெட் இருக்க வெற்றிக்கு இன்னும் 255 ரன் தேவை என்ற நிலையில் ரோரி பர்ன்ஸ் 77 ரன், ஜோ டென்லி 10 ரன்னுடன் நேற்று 4ம் நாள் ஆட்டத்தை நம்பிக்கையுடன் தொடங்கினர். பர்ன்ஸ் 84 ரன் (154 பந்து, 11 பவுண்டரி), டென்லி 31 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். பென் ஸ்டோக்ஸ் 14, பேர்ஸ்டோ 9 ரன் எடுத்து வெளியேற, பொறுப்புடன் விளையாடிய கேப்டன் ஜோ ரூட் 48 ரன் (101 பந்து, 8 பவுண்டரி) எடுத்து நோர்ட்ஜே பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக் வசம் பிடிபட்டார். அடுத்து வந்த வீரர்களில் ஓரளவு தாக்குப்பிடித்த பட்லர் 22 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 268 ரன் எடுத்து ஆல் அவுட்டானது (93 ஓவர்). ஆண்டர்சன் (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். அந்த அணி 64 ரன்னுக்கு 7 விக்கெட்டை பறிகொடுத்து பரிதாபமாக தோல்வியைத் தழுவியது. தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் ரபாடா 4, நோர்ட்ஜே 3, மகராஜ் 2, பிரிடோரியஸ் 1 விக்கெட் வீழ்த்தினர். டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 107 ரன் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான 30 புள்ளிகளை அள்ளியது. மொத்தம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் கேப் டவுனில் ஜனவரி 3ம் தேதி தொடங்குகிறது.


Tags : South Africa ,Test match ,England , First Test match, England defeated, South Africa
× RELATED தென்னாப்பிரிக்காவில் பாலத்தை...