×

22 கோடி ரயான் துணி தேக்கம் விசைத்தறிகள் ஸ்டிரைக் 50,000 பேர் வேலையிழப்பு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 22 கோடி மதிப்பிலான ரயான் துணிகள் தேக்கம் அடைந்துள்ளதால், ஏற்றுமதிக்கு ஊக்குவிக்க வலியுறுத்தி விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று முதல் ரயான் துணி உற்பத்தியை நிறுத்தி உள்ளனர். ஈரோட்டில் 60,000 விசைத்தறிகள் இயங்குகின்றன. இவை மூலம் ரயான், காட்டன் துணிகள், அரசின் இலவச வேட்டி, சேலை உற்பத்தியாகிறது.  இதில், ரயான் துணிகள் மட்டும் 25,000 தறிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 50 லட்சம் மீட்டர் உற்பத்தியாகிறது. இவை டையிங்கிற்காக வடமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து பல்வேறு வண்ணங்களாக மாற்றப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

குடியுரிமை திருத்த சட்ட போராட்டத்தால் வடமாநிலங்களில் டையிங் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தேக்கம் அடைந்துள்ள ரயான் துணிகளை விற்க முடியவில்லை. இவற்றை ஏற்றுமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆட்டோலூமில் ரயான் துணிகள் உற்பத்தி செய்ய தடை கோரியும் நேற்று முதல் ஜனவரி 12ம் தேதி வரை ரயான் துணிகள் உற்பத்தி செய்யும் விசைத்தறிகள் மட்டும் நிறுத்தப்படும் என ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர். இதன்படி, ஈரோடு மாவட்டத்தில் ரயான் துணிகள் உற்பத்தியை நேற்று முதல் விசைத்தறி உரிமையாளர்கள் நிறுத்தியுள்ளனர். இதனால், விசைத்தறி தொழிலை நம்பியுள்ள 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை இழந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : strikes ,layoffs , 22 crores , rayon cloth, stagnant looms, strikes, 50,000 layoffs
× RELATED ஏமனில் ஹவுதி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்