×

இனிமேல் தள்ளுபடி மழைதான்! பிஎஸ் 6 தர இன்ஜின் வருகையால் பழைய கார்களுக்கு மவுசு கூடுமா?: ‘ஜாக்பாட்’டுக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்

புதுடெல்லி: பிஎஸ் 6 தர இன்ஜின் வாகனங்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் ஆக இருக்கின்றன. இதனால், அடுத்த ஆண்டாவது பின்னடைவில் இருந்து மீளுமா என்ற ஏக்கத்தில் ஆட்டோமொபைல் துறையினர் தவிக்கின்றனர். அதேநேரத்தில், புது மாடல்கள் வருகையால் பழைய கார் விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மாசு அளவை கட்டுப்படுத்த, பாரத் ஸ்டேஜ் (பிஎஸ்) 6 தரத்திலான இன்ஜின்கள் கொண்ட வாகனங்களைத்தான் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பாரத் ஸ்டேஜ் 6 கார்கள் அடுத்த ஆண்டு ரீலீஸ் ஆக தயாராகி வருகின்றன.

பொருளாதார மந்தநிலையால், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஆட்டோமொபைல் துறையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 3.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்துள்ளனர். எனவே, புதிய ஆண்டாவது ஏற்றம் தருமா என்ற எதிர்பார்ப்புடன் வாகன நிறுவனங்கள் உள்ளன. இந்த மாதம் மிக அதிக தள்ளுபடி வழங்கியும் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. நிதியாண்டு முடிவதற்குள் அதிக தள்ளுபடியுடன் இவை விற்பனைக்கு வரும் என்று சிலர் காத்திருக்கின்றனர் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவிக்கின்றனர். எனவே, பழைய கார் விற்பனை செய்வோரிடமும் இது உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் கூறியதாவது: இந்த ஆண்டில் இதுவரை பழைய கார் விற்பனை சுமார் 12 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளது. 42 லட்சம் பழைய கார்கள் விற்பனையாகியுள்ளன. அடுத்த ஆண்டில் விற்பனை 15 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய விலையை விட, பிஎஸ் 6 பெட்ரோல் வாகனங்கள் 10,000 முதல் 50,000 வரையிலும், டீசல் வாகனங்கள் 50,000 முதல் 1 லட்சம் வரையிலும் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அதிகபட்ச தள்ளுபடியுடன் ஒப்பிட்டால் புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள வாகனங்கள் விலை 20 சதவீதம் அதிகம் இருக்கலாம். புதிய  கார் பிரியர்கள் பிஎஸ் 6 வாகனங்களுக்கு மாறும்போது, 3 ஆண்டுகளே ஆன பழைய  கார்கள் விற்பனைக்கு வரும். இதனால் பெரு  நகரங்களில் முன் எப்போதையும் விட பழைய கார் சந்தை சூடு பிடிக்கும் என்ற  நம்பிக்கை இருக்கிறது என்றனர்.


Tags : Customers Waiting For 'Jackpot , PS6 Quality Engine, With Old Cars
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 182 புள்ளிகள் உயர்வு..!!