×

கேரளாவின் முதல் முதியோர் இல்ல திருமணம் 66 வயதில் கைகோர்த்த காதல் தம்பதியர்: சமூக வலைதளங்களில் வைரலானது

திருவனந்தபுரம்: கேரளாவில் 65 வயதை  கடந்த தம்பதியர் இன்று காதல் திருமணம் செய்ய அரசாங்க முதியோர் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள தைக்கட்டுசேரியை சேர்ந்தவர் லட்சுமி அம்மாள் (65). இவரது கணவர் சுவாமி 21 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். அவரது உதவியாளரும், இரின்ஜாலாகுடாவை சேர்ந்தவருமான கோச்சானியன் (66) லட்சுமிக்கு ஆதரவாக இருந்து வந்துள்ளார். அதன் பின்னர், அவரை ராமவர்மபுரத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டார். இதனிடையே, குருவாயூர் சென்ற கோச்சானியன் அங்கு மயங்கி விழுந்தார். பிறகு பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட அவர், வயநாடு தொண்டு நிறுவனம் ஒன்றின் முதியோர் இல்லத்தில் தங்கி இருந்தார். அவரது உடல்நலம் தேறிய நிலையில், லட்சுமி அம்மாளை சந்திக்க வேண்டும் என்ற தனது விருப்பத்தை தெரிவித்தார்.
அதன்படி, கடந்த 2 மாதங்களுக்கு முன் ராமவர்மபுர முதியோர் இல்லத்துக்கு அழைத்து செல்லப்பட்ட கோச்சானியன், அங்கு தங்க வைக்கப்பட்டார். அவர்களின் காதலை புரிந்து கொண்ட அரசு முதியோர் இல்ல நிர்வாகிகள் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.

இதையடுத்து, கேரள மாநில விவசாயத்துறை அமைச்சர் வி.எஸ். சுனில் குமார் தலைமையில் இந்து முறைப்படி கடந்த 28ம் தேதி அவர்களுக்கு திருமணம் நடந்தது. இதுவே கேரளாவில் அரசு முதியோர் இல்லத்தில் நடைபெற்ற முதல் திருமணமாகும். இத்திருமணத்தில் அரசு முதியோர் இல்ல கண்காணிப்பாளர் ஜெயக்குமார், அரசு அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அமைச்சர் சுனில் குமார் இவர்களது திருமண புகைப்படத்தை தனது பேஸ்புக்கில் பதிவிட்டதை அடுத்து, அவை சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. கோச்சயான், லட்சுமி அம்மாளின் 21 வருட காதல், திருமணத்தில் முடிந்ததைத் தொடர்ந்து, கேரளாவில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் முதியவர்கள் திருமணம் செய்து கொள்ளவும் அவர்களுக்கென தனி அறை ஒதுக்குவதற்கும் அங்கீகாரம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Kerala ,home wedding , Kerala's first, elderly home wedding, 66-year-old couple, romantic couple
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு