×

பெற்றோர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து 5 லட்சம் முஸ்லிம் குழந்தைகள் உறைவிட பள்ளிகளில் அடைப்பு: சீன அரசு மீது குற்றச்சாட்டு

ஹோடன்: சீனாவில் ஆட்சி செய்யும் கம்யூனிஸ்ட் கட்சி, தனது நாட்டில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக அடக்கு முறையை கையாண்டு வருகிறது.  சீனர்களுக்கு மட்டுமே இந்நாட்டில் அனைத்து வகையிலும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்குர், கஜகஸ்தான் பிரிவுகளை சேர்ந்த முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கின்றனர். இந்த மாகாணத்தில் உள்ள 2 கோடி மக்கள் தொகையில் இவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில், உய்குர் பிரிவை சேர்ந்த முஸ்லிம் குழந்தைகள் 5 லட்சம் பேரை பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்துள்ள சீன அரசு, பாதுகாப்பு அரண்கள் போன்ற உறைவிட பள்ளிகளில் அவர்களை அடைத்து தனிமைப்படுத்தி இருக்கிறது. அங்கு அவர்களுக்கு கல்வி, உணவு உட்பட அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகின்றன. பெற்றோரை இழந்த குழந்தைகளை, அவர்களின் உறவினர்கள் வளர்க்க விரும்பினாலும் அனுமதி அளிப்பது கிடையாது. ஒருவகையில், இந்த உறைவிடப் பள்ளிகள் தடுப்பு காவல் மையங்கள் போன்றே செயல்படுகின்றன. இவற்றை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த மாகாணத்தில் உள்ள 800 சிறு நகரங்களிலும் இதேபோன்ற உறைவிட மையங்களை அமைக்க சீன அரசு திட்டமிட்டு, அதற்கான வேலைகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கம்யூனிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நினைவு அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில், உய்குர் சமூகம் பற்றி ஆராயும் அட்ரியன் ஜென் என்ற மானுடவியல் நிபுணர், இந்த கொடூர சம்பவத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சீனாவில் ஆட்சி நடத்தும் கம்யூனிச அரசின், உய்குர் சமூகம் பற்றிய தொலைநோக்கு உத்தி மிகவும் கொடூரமானது. அச்சமூகத்தின் இளம் தலைமுறையினரை சிறை பிடித்து அடக்கி வைப்பதையே அது குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. சீனாவில் முஸ்லிம்களின் மக்கள்தொகையை கட்டுப்படுத்த, கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் பெற்றோர்களிடம் இருந்து பிரித்த 5 லட்சம் உய்குர் இன குழந்தைகளை உறைவிட பள்ளிகளுக்கு சீன அரசு அனுப்பி உள்ளது.

குறிப்பாக, சீனாவின் மேற்கில் உள்ள ஜின்ஜியாங் பகுதியில் வசிக்கும் உய்குர், கஜகஸ்தானிய முஸ்லிம் பெற்றோர்களில் ஏறக்குறைய 10 லட்சம் பேர் இங்குள்ள தடுப்பு முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு சர்வதேச அளவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களின் குழந்தைகளை உறைவிட பள்ளிகளில் சேர்க்கும்படி சீன அரசு மிரட்டி  வருகிறது. இந்த மாகாணத்தில் உள்ள 800க்கும் மேற்பட்ட நகரங்களில் அடுத்தாண்டு இறுதிக்குள் தலா இரண்டு உறைவிடப் பள்ளிகளை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், ‘இந்த பள்ளிகள் வறுமை ஒழிப்பு நடவடிக்கையாக அமைக்கப்பட்டு உள்ளன.

இவர்களின் பெற்றோர் தொலை தூரங்களில் பணியாற்றுவதால், குழந்தைகளை கவனிக்க முடிவதில்லை. எனவேதான், உறைவிட பள்ளிகளில் இந்த குழந்தைகள் பராமரிக்கப்படுகின்றனர்,’ என உலக நாடுகளுக்கு கூறி வருகிறது சீன அரசு. இங்கு பயிலும் குழந்தைகள் எப்போதாவது ஒருமுறைதான் பெற்றோரை சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர். அப்போது கூட, முஸ்லிம் மதம் குறித்து குழந்தைகளிடம் பேசக் கூடாது என்று பெற்றோருக்கு  நிபந்தனை விதிக்கப்படுகிறது. சீனா முழுவதிலும் இருந்து பாரம்பரிய ஹான் சமூகத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இப்பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதே நேரம், உய்குர் சமூக கல்வியாளர்கள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளனர். அரசை எதிர்த்தால் தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள் என்று உய்குர் சமூக ஆசிரியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : children ,schools ,parents ,government ,Chinese , 5 lakh Muslim children, lodging schools, blocked, blamed , Chinese government
× RELATED பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்...