×

விமான நிலையத்தில் பரபரப்பு 1.12 கோடி தங்கம் பறிமுதல்: சிங்களர்கள் உட்பட 5 பேர் கைது

சென்னை: சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 1 கோடியே 12 லட்சம் மதிப்புடைய 2 கிலோ 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிங்கள பயணி உள்பட 5 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தாய்லாந்து நாட்டில் இருந்து தாய் ஏர்வேஸ் விமானம் நேற்று அதிகாலை 1.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். சிவகங்கையை சேர்ந்த முகமது அசாருதீன் (26) தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்திருந்தார். அவர் தனது உள்ளாடையில் மறைத்து கடத்தி வந்த தங்க கட்டிகளை கைப்பற்றினர்.

மேலும் துபாயிலிருந்து எமிரேட் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தது. அதில் விருதுநகரை சேர்ந்த அபுபக்கர் சித்திக் (42), ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமாலுதீன் (35) ஆகியோர் வந்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் இருந்த தங்ககட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே நேற்று அதிகாலை 3 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வந்த விமானத்தில் இலங்கையை சேர்ந்த ரணசிங்கே டான் (27), மனதுங்காசுனிமால் (28) ஆகியோரது ஆசனவாயில் மறைத்து வைந்திருந்த தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வாறாக சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து நடந்த சோதனையில் 1.12 கோடி மதிப்புடைய 2 கிலோ 900 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக சிங்கள பயணிகள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.


Tags : airport ,Sinhalese , 5 people, including Sinhalese, arrested , smuggling gold , airport
× RELATED அதிக பயணிகள் கையாண்டதில் சென்னை விமான நிலையம் 3வது இடம்