×

25 லட்சம் கேட்டு ரவுடிகள் கடத்தல் ஓடும் காரில் இருந்து தப்பிய தொழிலதிபர்: கும்பலுக்கு போலீஸ் வலை

பூந்தமல்லி: மதுரவாயலில் 25 லட்சம் கேட்டு ரவுடி கும்பல் கடத்தியபோது ஓடும் காரில் இருந்து குதித்து தொழிலதிபர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆவடி அயப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (30). தொழிலதிபர். அம்பத்தூர் தொலைபேசி இணைப்பகம் அருகே எம்எம் லாஜிஸ்டிக் என்ற பெயரில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் திருச்சியில் இருந்து அம்பத்தூரில் உள்ள தனது நிறுவனத்துக்கு கன்டெய்னர் லாரியில் லோடு வருவதாக முகேஷுக்கு தகவல் கிடைத்தது. இதனால் வில்லிவாக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு காரை நிறுத்திவிட்டு முகேஷ் காத்திருந்தார்.அப்போது திடீரென பிரபல ரவுடி தில் பாண்டி மற்றும் அவரது 2 கூட்டாளிகள் பைக்கில் வந்து காருக்குள் இருந்த முகேஷிடம், ‘‘எங்களுக்கு 25 லட்சம் மாமூல் தராவிட்டால் உன்னை கொன்றுவிடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர்.
அதற்கு முகேஷ், ‘‘பணம் இல்லை’’ என கூறியதால், அவரது தலையில் பீர்பாட்டிலால் தாக்கி, அவரது காரிலேயே முகேஷை ஏற்றி பூந்தமல்லி நோக்கி கடத்தி சென்றனர்.

மதுரவாயல் காவல் நிலையம் அருகே வந்தபோது தொழிலதிபர் முகேஷ் திடீரென கார் கதவை திறந்து வெளியில் குதித்துள்ளார். இதனால் அவரது காருடன் ரவுடி தில் பாண்டி கும்பல் தப்பி சென்றனர். இதுகுறித்து மதுரவாயல் போலீசில் தொழிலதிபர் முகேஷ் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்மையிலேயே ₹25 லட்சம் மாமூல் கேட்டு கடத்தினார்களா? இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? காருக்குள் இருந்து அவர் எப்படி தப்பித்தார்?  என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இதுசம்பந்தமாக வில்லிவாக்கத்தில் இருந்து அண்ணாநகர், கோயம்பேடு மற்றும் மதுரவாயல் வரையுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தனிப்படை மூலம் காருடன் தப்பி சென்ற பிரபல ரவுடி தில் பாண்டி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags : Businessman ,gang A businessman ,road , businessman , escaped from a car driven, crossing road, asking , 25 lakhs
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி