×

உபி., மபி., உட்பட பல்வேறு மாநிலங்களில் பிரியங்கா மீதான தாக்குதலை கண்டித்து காங். போராட்டம்

போபால்: உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தியை போலீசார் தாக்கியதை கண்டித்து, பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராடி கைது செய்யப்பட்ட முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரியை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி நேற்று முன்தினம் சென்றார். அவருக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இருப்பினும், தடையை மீறிய அவர் அப்பகுதிக்கு செல்ல முயன்றார். அப்போது பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் தனது கழுத்தை பிடித்ததோடு, மற்றொரு அதிகாரி கீழே பிடித்து தள்ளி விட்டதாக பிரியங்கா குற்றம்சாட்டினார். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சம்பவம் நடக்கவில்லை என உபி. போலீஸ் அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், பிரியங்காவிடம் போலீஸ் அதிகாரிகள் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரசார் நேற்று போராட்டம் நடத்தினர். தலைநகர் டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம் உட்பட பல மாநிலங்களில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, உபி முதல்வர் யோகி ஆதித்யாநாத்தின் உருவபொம்மை எரிக்கப்பட்டு, இம்மாநில அரசுக்கும், பாஜ.வுக்கு எதிராகவும் முழக்கமிடப்பட்டது. டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெற்கு டெல்லியில் உள்ள அசாம் பவன் அருகே இருந்து உத்தரப் பிரதேச பவன் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

‘பெருமை அடைகிறேன்’ கணவர் வதேரா பூரிப்பு:
பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘பிரியங்காவிடம் உபி பெண்  போலீசார் நடந்து கொண்ட விதத்தால் அமைதி இழந்தேன். ஒருவர் பிரியங்காவின் கழுத்தை பிடிக்கிறார். மற்றொருவர் அவரை இழுக்கிறார். இதனால், அவர் கீழே விழுந்து விட்டார். ஆனால், அவர் உறுதியாக இருந்தார். இருசக்கர வாகனத்தில் சென்று முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியின் குடும்பத்தினரை சந்தித்தார். தேவை இருக்கும் மக்களிடம் நீ சென்று சேர வேண்டும் என்ற உனது உழைப்பை கண்டு பெருமை அடைகிறேன். நீ செய்தது சரியானது. தேவைப்படும் மக்களுடனும்,  துன்பத்தில் உள்ளவர்களோடும் இருப்பதில் எந்த குற்றமும் இல்லை,’ என்று கூறியுள்ளார்.

Tags : attacks ,Kong ,Priyanka ,states ,Mabi Struggle ,UP , UP, Mabi, State, Priyanka, Attack, Condemnation, Cong. , Fight
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...