×

ஜனநாயக வழியில் போராடுவோரை கைது செய்வது காவல் துறையின் அராஜக போக்கு: எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம்

சென்னை: ஜனநாயக் வழியில் போராடுவோரை கைது செய்யும் நடவடிக்கை காவல் துறையின் அராஜக போக்கு என்று, எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கை: குடியுரிமை சட்டத்திருத்தம், என்.ஆர்.சி. மற்றும் என்.பி.ஆர். உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர், மாணவர்கள், பெண்கள், அறிவுஜீவிகள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர். ஆனால் மக்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காத பாஜ அரசு அடக்குமுறையின் மூலமாக போராட்டங்களை ஒடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்திலும்  ஜனநாயக வழியில் போராடி வரும் பல்வேறு அமைப்பினர், ஜமாத்தினர், மாணவர்கள், பெண்கள் மீது ஆயிரக்கணக்கான வழக்குகளை காவல் துறை பதிவு செய்து வருகின்றது.

இந்நிலையில் பெசன்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டத்திருத்தம், என்ஆர்சி மற்றும் என்.பி.ஆர் உள்ளிட்ட சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், கோலம் போட்டு பெண்கள் தங்களது எதிர்ப்பை  வெளிப்படுத்தினர். ஆனால் காவல்துறை அப்பெண்களை அராஜகமாக கைது செய்துள்ளது. காவல் துறையின் இந்த நடவடிக்கை தவறானது, கண்டிக்கத்தக்கது.

ஜனநாயக வழியில் மக்கள் போராட்டங்களை நடத்தவும், எதிர்ப்புகளை வெளிப்படுத்தவும் நீதிமன்றங்களே அனுமதித்துள்ள நிலையில், கோலங்கள் மூலமாக, இந்தியாவின் ஆன்மாவை தாக்கும் குடியுரிமை சட்டத்திருத்தம், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் சட்டங்களுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியதற்காக கைது செய்வது காவல் துறையின் அராஜக போக்கை வெளிக்காட்டுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : arrest ,Police Department ,party ,Democrats ,fighters ,SDBI , democratic way, arrest of fighters, SDBI party, severe condemnation
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...