×

பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும் வலியுறுத்தல்: காற்றாலை மின்உற்பத்தியாளர்கள் கோரிக்கை

சென்னை: காற்றாலை உற்பத்தியாளர்களுக்கு, மின்வாரியம் பாக்கி வைத்துள்ள தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி உச்சபட்ச மின்தேவையின் அளவு 13,000 கோடிக்கு மேல் உள்ளது. இதற்கு தேவையான மின்சாரத்தை அனல், நீர், காற்றாலை, சூரியசக்தி மூலமாக தயாரித்து விநியோகித்து வருகிறது. இதில், காற்றாலைகளின் பங்கு முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இவ்வகையிலான உற்பத்தி நிலையங்கள் கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை, அதை அமைத்த உற்பத்தியாளர்களே பயன்படுத்திக்கொள்கின்றனர். மற்றொரு பகுதியை மின்வாரியத்திற்கு விற்பனை செய்கிறார்கள். இதை குறிப்பிட்ட தொகை கொடுத்து மின்வாரியம் வாங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மின்வாரியம் கொள்முதல் செய்யும் மின்சாரத்திற்கான தொகையில் பாக்கி வைத்துள்ளதாகவும், அதை தராமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் தாங்கள் கடுமையாக பாதிப்புக்குள்ளாவதாகவும், உடனடியாக பாக்கி தொகையை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

இதுகுறித்து காற்றாலை உற்பத்தியாளர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் பெரும்பாலன இடங்களில் அமைக்கப்பட்டுள்ள காற்றாலைகள் வங்கியில் நிதி உதவி பெற்று அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்வாரியம் காற்றாலை உற்பத்தியாளர்களிடமிருந்து பெரும் மின்சாரத்திற்கான தொகையில் பாக்கி வைத்துள்ளது. இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றோம். வங்கிகளுக்கு கடனை திரும்ப செலுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே எங்களின் நிலையை கருத்தில் கொண்டு, உடனடியாக பணத்தை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Tags : Dues, supply, insistence, wind power generators, demand
× RELATED சொத்துகளை அபகரித்து, வீட்டைவிட்டு...