×

வேலூர் சிறையில் 9வது நாளாக உண்ணாவிரதம் முருகன், நளினியை மதுரை சிறைக்கு மாற்ற மனு

வேலூர்: வேலூர் சிறையில் 9வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகன் 22 கிலோ எடை குறைந்து உடல் மெலிந்துள்ளதாகவும், நளினி- முருகன் இருவரையும் மதுரை சிறைக்கு மாற்ற ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகனுக்கு உறவினர்கள் கொண்டு வரும் உணவுப்பொருட்களை அனுமதிப்பதில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து கடந்த 21ம் தேதி முதல் அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். பழங்களை மட்டும் உண்டு, தொடர்ந்து நேற்றும் 9வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘முருகனுக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. காலை, மாலையில் தினமும் டாக்டர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்’ என்றனர். இதுகுறித்து முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி கூறியதாவது: சிறையில் முருகன் தனது ஆன்மிக வாழ்க்கையை சிறைத்துறையினர் சிதைத்துவிட்டதாக கூறினார். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். சிறையில் சந்திக்கும்போது மனைவி கொடுக்கும் உணவையும் தடுக்கின்றனர். புழல் சிறைக்கு மாற்ற கோரியதற்கும் நடவடிக்கை இல்லை என்று கூறினார்.

உண்ணாவிரதம் தொடங்கும் முன்பு 64 கிலோ இருந்த முருகன் தற்போது 22 கிலோ எடை குறைந்து 42 கிலோவாக உடல் மெலிந்துள்ளார். 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளது. அவரை தற்கொலைக்கு தூண்டுவதால் நளினி- முருகன் இருவரையும் மதுரை சிறைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Murukan ,jail ,Vellore , Vellore jail, 9th day, fasting, Murugan, Nalini, Madurai jail, petition
× RELATED 9வயது சிறுமி கொலை வழக்கு புதுவை...