×

திருவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிப்பு: தலைவர்கள் கடும் கண்டனம்

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டதற்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர் காமராஜர்  சிலைக்கு நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் அவமரியாதை செய்திருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த நகர் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை அவமரியாதை செய்த நபர்களின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதன் பிறகு மக்கள் கலைந்து சென்றனர். பதற்றம் நிலவுவதால் தொடர்ந்து அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் டிவிட்டர் பதிவில், அதிமுக ஆட்சியில் பொதுமக்களைப் போலவே தலைவர்கள் சிலைக்கும் பாதுகாப்பில்லை. ஸ்ரீ வில்லிபுத்தூரில் காமராஜர் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய இழிசெயல்கள் தொடர இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது என்ற துணிச்சலே காரணம். கையாலாகாத இந்த அரசு சமூக விரோதிகளை அடக்க தயங்கக்கூடாது என தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனிடையே காமராஜர் சிலை அவமரியாதை செய்யப்பட்ட தொடர்பாக ஸ்ரீ வில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராமன் (29) என்பவரை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

Tags : Kamarajar ,leaders ,Tiruvilliputhur , Tiruvilliputtur, Kamarajar statue, insult, leaders, condemnation
× RELATED மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் ராஜினாமா ஏற்பு