×

வேலூரில் 2 பேர் கைது விவகாரம் தமிழகத்தில் போலி சிபிஐ நெட்வொர்க்: விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

வேலூர்: வேலூரில் 2 பேர் கைது செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் போலி சிபிஐ நெட்வொர்க் பரவி உள்ளதாக பல கட்ட விசாரணையில் சந்தேகம் எழுந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வேலூர் மாவட்டத்தில் போலி சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் கண்காணிக்க தொடங்கினர். இதையடுத்து காட்பாடி அடுத்த கழிஞ்சூரை சேர்ந்த அரிஹரன்(30), விருதம்பட்டை சேர்ந்த ரசூல் மத்தீன்(43) ஆகிய 2 போலி சிபிஐ அதிகாரிகளை விருதம்பட்டு போலீசார் கடந்த 16ம் தேதி கழிஞ்சூரில் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
போலி சிபிஐ அதிகாரிகளான ரசூல் மத்தீன், அரிஹரன் ஆகியோர் எந்தவித மோசடியிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்தனர். ஆனால் சிபிஐ அலுவலகத்தில் கிளார்க் வேலை வாங்கி தருவதாகவும், நீதிமன்றத்தில் காவலாளி வேலை வாங்கி தருவதாகவும் கூறி பலரிடம் ரூ.85 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலியாக பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி  மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடந்து வருகிறது.

கைது செய்யப்பட்ட ரசூல் மத்தீன், அரிஹரன் ஆகிய 2 பேரும் சமையல் மாஸ்டர்கள். இதனால், போலி பணி நியமன ஆணை தயாரிக்க கணினியில் மார்பிங் தெரிந்தவர்கள் உதவி செய்திருக்க வாய்ப்புள்ளது. எனவே, பணி நியமன ஆணையை தயாரித்தவர்கள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. இதுவரை நடத்திய விசாரணையில் இவர்களது பின்னணியில் பெரிய நெட்வொர்க் இயங்கி கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலி சிபிஐ அதிகாரிகள் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, கைது செய்யப்பட்டவர்களின் செல்போனில் தொடர்பில் இருந்தவர்களை பட்டியலிட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் போலி பணி நியமன ஆணை தயாரித்தது, சிபிஐ அலுவலக சீல் பயன்படுத்தி மோசடி செய்தது போன்ற குற்றங்களில் வழக்குப்பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக போலி பணி நியமன ஆணையை டிசைன் செய்து கொடுத்தது யார்? அதற்கு பயன்படுத்திய போலி சீல் ஸ்டாம்ப் எங்கு தயாரிக்கப்பட்டது? போன்ற விவரங்கள் திரட்டப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : CBI ,Tamil Nadu ,Vellore Fake CBI ,Vellore , Vellore, 2 persons, Arrested, Tamil Nadu, Fake CBI Network, Investigation, Information
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...