×

ஒழுங்கா பணத்தை வாங்கிட்டு கட்சியில வந்து சேருங்க... அதிமுகவினர் மிரட்டுறாங்க என சுயேட்சைகள் புகார்

மதுரை: ‘பணம் வாங்கிக்கொள்ளுங்கள், அதிமுகவில் இணைந்து விடுங்கள் என ஒவ்வொரு பதவிக்கும்  பல லட்சம் ரூபாய் பேரம் பேசுகின்றனர்’ என சுயேட்சை வேட்பாளர்கள், ஊராட்சி உதவி இயக்குநரிடம் புகார் மனு அளித்தனர். மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியிடும் கொட்டாம்பட்டியை சேர்ந்த அசாருதீன் தலைமையில் சுயேட்சை வேட்பாளர்கள் செல்வராஜ், சின்னையா, சின்னன், குமார், சாமிக்கண்ணு, செல்லச்சாமி, பாண்டியராஜன் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திருவள்ளுவர் சிலை முன்பிருந்து நேற்று ஊர்வலமாக புறப்பட்டு, ‘பாதுகாப்பு கொடு, வாக்கு எண்ணிக்கையில் தில்லுமுல்லு செய்ய நினைக்காதே’ என கோஷம் எழுப்பியவாறு, ஊர்வலமாக மதுரை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

அங்கு ஊராட்சி உதவி இயக்குநர் செல்லத்துரையிடம் புகார் மனு அளித்தனர். அதில், ‘‘கொட்டாம்பட்டி ஒன்றியத்தில் சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனை தெரிந்து கொண்ட ஆளும்கட்சியினர் சிலர், எங்களிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள். அதிமுகவில் இணைந்து விடுங்கள் என ஒவ்வொரு பதவிக்கும் பல லட்சம் ரூபாய் பேரம் பேசுகின்றனர். இதற்கு சம்மதிக்க மறுத்ததால், எங்களை தொடர்ந்து மிரட்டுகின்றனர். எனவே வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது.


வாக்கு எண்ணிக்கையை பொதுமக்கள் பார்க்கும் வகையில் எல்இடி திரையில் நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். கொட்டாம்பட்டி வாக்கு எண்ணும் மையத்திற்குள் ஒன்றிய அலுவலக ஊழியர்கள் செல்ல அனுமதிக்கக்கூடாது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்’’ என்று தெரிவித்திருந்தனர். உதவி இயக்குநர் செல்லத்துரை, ‘‘இதுதொடர்பாக கலெக்டரிடமும், மாநில தேர்தல் ஆணையத்திடமும் தெரிவிக்கிறோம். அவர்கள் கூறும் அறிவுரைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். அதன்பின் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Independents ,AIADMK ,Complainant , Ethical money, party, AIADMK, blackmail, independents, complaint
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...