×

துப்பாக்கியை காட்டி தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்: மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிமுனையில் விரட்டியதால், ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனையுடன் கரை திரும்பினர். இலங்கை கடற்படையினர் கடந்த 10 நாட்களாக தலைமன்னார் முதல் கச்சத்தீவு, நெடுந்தீவு கடல் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கப்பல்களில் இரவு பகலாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராமேஸ்வரத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் நேற்று முன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அன்று இரவு மீன்பிடித்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை வழிமறித்து மீன்பிடிக்க விடாமல் தடுத்து விரட்டியுள்ளனர்.

சில படகுகளில் இருந்த மீன்பிடி வலையை வெட்டி கடலில் வீசியுள்ளனர். மேலும், துப்பாக்கியை காட்டி இங்கு மீன்பிடிக்க வரக்கூடாது என எச்சரித்து விரட்டியுள்ளனர். இலங்கை கடற்படையினரின் மிரட்டலை தொடர்ந்து அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டு இருந்து மீனவர்கள் தங்களது படகுகளை வேறு பகுதிகளுக்கு ஓட்டிச்சென்று மீன்பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். கரை வந்து சேர்ந்த மீனவர்களின் படகுகளில் மீன்கள் மிகவும் குறைவாக இருந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

Tags : fishermen ,Tamil , Gun, fishermen, chase
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...