×

மேட்டுப்பாளையத்தில் யானைகள் முகாம் அருகே 57 காட்டு யானைகள் உலா

கோவை: கோவை அடுத்த மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் யானைகள் புத்துணர்வு முகாம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. முகாமில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மொத்தம் 28 கோயில் யானைகள் பங்கேற்றுள்ளன. இவை அனைத்தும் பெண் யானைகள். முகாம் நடக்கும் பகுதி காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள இடமாகும். தற்போது, யானைகள் இடப்பெயர்ச்சி காலம் நடந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து மேட்டுப்பாளையம் வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முகாம் நடக்கும் பகுதியில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நெல்லித்துறை காப்புக்காட்டில் 23 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. மேலும், 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்டியூர் அருகே  22 யானைகள் ஒரு கூட்டமாகவும் மற்றொரு கூட்டத்தில் 12 யானைகளும் உள்ளன. முகாமை சுற்றி 3 கூட்டமாக மொத்தம் 57 காட்டு யானைகள் சுற்றி வருகின்றன. எனவே, கோயில் யானைகள் முகாமுக்குள் காட்டு யானைகள் வருவதை தடுக்கும் வகையில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த குழுவினர் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Mettupalayam ,Elephants Camp , Mettupalayam, Elephants Camp, 57 Wild Elephants, Sur
× RELATED மோடி ஆட்சியை பார்த்து ஐநா சபையே சிரிக்கிறது