×

நாமக்கல் அருகே பரிதாபம் லாரி மீது கார் மோதி 5 பேர் சாவு: பொதுப்பணித்துறை இன்ஜினியர் குடும்பமே பலியான சோகம்

சேந்தமங்கலம்: நாமக்கல் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதியதில், பொதுப்பணித்துறை இன்ஜினியர் குடும்பத்துடன் பலியானார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (38). திருச்சி மாவட்ட பொதுப்பணித்துறை இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். இவர் திருவண்ணாமலையில் இருந்து திருச்சிக்கு நேற்று மாலை காரில் சென்று கொண்டிருந்தார். காரில் அவரது மனைவி தேவிபிரியா(33), மகள் சாய்கிருபா(5), மாமனார் ராஜாமணி(62), மாமியார் கோமதி(49) ஆகியோரும் இருந்தனர்.

மாலை 4.30 மணியளவில் நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகில் உள்ள ரெட்டிபுதூர் பஸ் ஸ்டாப்பில் நிறுத்தப்பட்டு இருந்த லாரி மீது கார் பயங்கரமாக ேமாதியது. இதில், அந்த கார் சுக்குநூறாக நொறுங்கியது. காரில் இருந்த 5 பேரும் கூச்சலிட்டு அலறினர். சத்தம் கேட்டு அப்பகுதியினர் ஓடிவந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்து புதுச்சத்திரம் போலீசாரும் மீட்பு வாகனத்தின் மூலம் அவர்களை மீட்க போராடினர். கார் அப்பளம் போல் நொறுங்கியிருந்ததால், சிக்கல் ஏற்பட்டது. சுமார் ஒரு மணிநேர போராட்டத்திற்கு பின், காரில் சடலமாக இருந்த 5 பேரையும் மீட்டனர்.  

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டம் டோன் கிராமத்தைச் சேர்ந்த லாரி டிரைவர் சஸ்தகிரி(50), ஆந்திராவில் இருந்து நேற்று முன்தினம், பருப்பு லோடு ஏற்றிக்கொண்டு திருச்சி புறப்பட்டவர், ரெட்டிபுதூர் பஸ் ஸ்டாப்பில் லாரியை நிறுத்தி விட்டு, சமையல் செய்ய சிலிண்டரை எடுத்து வைத்துக் கொண்டிருந்தபோது, கார் மோதியது தெரியவந்தது. இந்த கோர விபத்து குறித்து தகவலறிந்த நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ், மாவட்ட எஸ்பி அருளரசு ஆகியோர், நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். முன்னாள் மத்திய இணையமைச்சர் காந்திசெல்வனும் வந்து பார்வையிட்டார். இது தொடர்பாக, லாரி டிரைவர் சஸ்தகிரி, போலீசில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Tags : car crashes ,Namakkal 5 , Namakkal, pity, truck, car, collision, 5 people, death, public works engineer, tragedy
× RELATED டூவீலர் மீது கார் மோதியது கூலித்தொழிலாளி பலி