×

குறைத்தது நாங்கள்; உயர்த்துவது அவர்களா? : ஜெயக்குமார், தமிழக அமைச்சர்

ஜிஎஸ்டி வரியை பொறுத்தவரையில் தமிழகத்தை சேர்ந்த வணிகர்கள், சிறு வியாபாரிகள், வர்த்தகர்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற அடிப்படையில் தான் ஒவ்வொரு முறையும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வரி குறைப்பு, வரி விலக்கு தொடர்பாக பரிந்துரை செய்து, பல கோரிக்கைகள் முன்வைக்கப்படுகிறது. சிறு, குறு தொழில்கள் மேம்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, 18 சதவீதம் என்கிற வரியை 12 சதவீதமாக குறைத்து விட்டோம். சின்ன, சின்ன வியாபாரிகளின் நலன் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து குரல் கொடுத்ததன் பயனாக ரூ.40 லட்சத்துக்கு கீழ் இருந்தால் ஜிஎஸ்டி சட்டம் பொருந்தாது. அவர்கள் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்ற நிலை வந்தது; இதனால், பல லட்சம் சிறு, குறு வியாபாரிகள் நலன் பாதுகாக்கப்பட்டது.  ரூ.1 லட்சத்துக்குள்  உள்ள பொருட்களை தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம். இதற்காக இவேபில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இணக்க முறை வரி ரூ.1.50 கோடி வரை அனுமதிக்கிறோம். ஒரு தொழில் செய்யும் போது இணக்கமுறை வரிக்குள் வந்து விட்டால் அவர்கள் 1 சதவீதம், 3 சதவீதம் வரி கட்டினால் போதும். இந்த மாதிரி அனைத்து விஷயங்களிலும் கவனம் செலுத்தி சிறு,குறு வியாபாரிகள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மத்திய அரசுக்கு வரிவருவாய் உயர்த்தி கொள்ளும் திறன் உள்ளது. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வரி வருவாயை உயர்த்தி கொள்ளலாம். ஆனால், மாநிலங்களை பொறுத்தவரை குறைந்த அளவில் நிதியை திரட்ட ஆதாரம் உள்ளது. மக்கள் மீது எந்த வித சுமையும் நம்மால் வைக்க முடியாது. ஜிஎஸ்டி கவுன்சில் பொறுத்தவரையில் நாம் கொடுத்த அழுத்தத்தின் பேரில், ஏற்கனவே அவர்கள் வரி குறைத்ததை எப்போதும் தொடக்கூடாது. அவர்கள், புதிதாக வரி வருவாயை கூட்டிக்கொள்ள பல வழிகள் உள்ளன. அந்த வழியில் வேண்டுமென்றால் அவர்கள் வருவாயை கூட்டிக்கொள்ளலாம். வரி உயர்த்துவதில் நமக்கு உடன்பாடு இல்லை. ஒரு பொருளுக்கு வரியை குறைக்க முடிவு செய்தது நாங்கள் உறுப்பினராக உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் தான். இந்த கவுன்சிலில் எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்ட பொருட்களுக்கு தான் வரியை குறைக்கின்றனர். இப்போது, அந்த பொருளுக்கு வரியை அவர்கள் கூட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதனால், வரி வருவாயை கூட்ட மத்திய அரசு பல்வேறு வழிகளில் யோசிக்கலாம்.

ஐஜிஎஸ்டி, சிஜிஎஸ்டி, ஜிஎஸ்டி என வரி வசூலிக்கப்படுகிறது. இதில், சிஜிஎஸ்டி மத்திய அரசுக்கு சென்று விடும். குறிப்பாக, ரூ.10 வரியில் ரூ.5 மாநிலத்துக்கும் ரூ.5 மத்திய அரசுக்கும் போகும். ஆனால், ஐஜிஎஸ்டி வரி என்பது எந்த மாநிலத்தில் பொருள் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அந்த பொருட்கள் பல மாநிலங்களுக்கு விற்பனைக்கு போகும். அந்த மாநிலத்தில் விற்கும் பொருட்களில் வரி கணக்கிடப்படும். அந்த வகையில் கணக்கிடப்பட்டு எங்களுக்கு சேர வேண்டிய வரி ரூ.4500 கோடி ஆகும். அந்த வரி வருவாயை பெற தான் ஜிஎஸ்டி கவுன்சில் ஒரு குழு போட்டுள்ளது.   பீகார் துணை முதல்வர் தலைமையில் உள்ள குழுவில் தமிழக அரசு சார்பில் நானும் உறுப்பினராக உள்ளேன். அந்த குழு கூடி பரிந்துரையை ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு அனுப்பும். அதை வைத்து கவுன்சில் முடிவு செய்யும். நமக்கு இழப்பீடு தொகை 2 மாதங்களுக்கு ஒரு முறை தருவார்கள். தற்போது நமக்கு இரண்டு மாதங்களுக்கான இழப்பீடு தொகை மட்டும் தர வேண்டியுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் பொறுத்தவரையில் நாம் கொடுத்த அழுத்தத்தின் பேரில், ஏற்கனவே அவர்கள் வரி குறைத்ததை எப்போதும் தொடக்கூடாது.

Tags : Jayakumar ,Tamil Nadu , Reduced We,raising, Jayakumar, Minister,Tamil Nadu
× RELATED வரலாறு தெரியாமல் அண்ணாமலை பேசுகிறார்:...