×

பொங்கலன்று மாணவர்கள் வர உத்தரவிட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்: திமுக மாணவர் அணி அறிவிப்பு

சென்னை: மோடியின் உரையை கேட்க பொங்கலன்று மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது.திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:
ஜல்லிக்கட்டை முறியடிக்க வேண்டும், தமிழர் பண்பாட்டை ஒழிக்க வேண்டும் என்ற ஒரே காழ்ப்புணர்ச்சியின் காரணமாக தமிழர் விரோத பிரதமர் மோடி தான் ஆற்றும் உரையை கேட்பதற்காக வரும் 16ம் தேதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களுக்கு வர வேண்டும் என்று உத்தரவை வெளியிட செய்திருக்கிறார்.
தமிழின தலைவர் கலைஞர் அறிவித்த தமிழ் புத்தாண்டாம் தை பொங்கலுக்கு மக்களும் மாணவர்களும் வீட்டில் இருக்க கூடாது. தமிழர்களின் வரலாற்றை நினைவுகூரக்கூடாது என்ற  எண்ணத்தின் வெளிப்பாடே இந்த அறிவிப்பு.

இதை கண்டும் கேட்டும் வாயை பொத்தி மவுனம் காக்கிறது இந்த அடிமை எடுபுடி அரசு. இதே நிலையினை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருவதை மிகக்கடுமையாக திமுக மாணவரணி கண்டிக்கிறது. குறிப்பாக, தமிழர்களின் திருவிழாவாம் பொங்கலன்று மாணவர்களை பள்ளிக்கு வரச்சொல்வது பாசிசத்தின் உச்சமன்றி வேறல்ல. இந்த அறிவிப்பு தமிழர்களை அவர்களின் பண்பாட்டை அழிக்கும் முடிவன்றி வேறொன்றுமல்ல. அறிவிப்பை வாபஸ் பெறுங்கள். இல்லையெனில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி திமுக மாணவர் அணி தொடர் கண்டன ஆர்ப்பாட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இது குறித்து ஏழிலரசன் எம்எல்ஏவிடம் கேட்ட போது, “ சென்னையில் பள்ளி கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு திமுக மாணவரணி சார்பில் நாளை(இன்று) காலை 10 மணியளவில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்” என்றார்.

Tags : Demonstration ,Tamil Nadu ,order Demonstration , Demonstration across, Tamil Nadu ,protest ,students' order
× RELATED வாக்குப்பதிவுக்கு 3 நாட்களே உள்ள...