×

கடத்தல் ஆற்றுமணல் தாராளமாக கிடைப்பதால் வெளிநாட்டு மணல், எம்சாண்ட் விற்பனை ‘டல்’

* கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு
* முதல்வர் பொறியாளர்களுடன் ஆலோசனை
* கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுரை
சென்னை: கடத்தல் ஆற்றுமணல் தாராளமாக கிடைப்பதால் வெளிநாட்டு மணல், எம்சாண்ட் விற்பனை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, வருவாய் இழப்பை தடுக்க மணல் கடத்தலில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டுமே மணல் விற்பனை செய்யப்படுகிறது. மற்ற இடங்ளில் மணல் விற்பனை செய்யப்படாததால் மணல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி கொண்டு சமூக விரோதிகள் சிலர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, வைப்பாறு, தாமிரபரணி, வைகை, காவிரி, குண்டாறு, கொசஸ்தலையாறு உள்ளிட்ட பல்வேறு ஆற்றுப்படுகைகளில் சமூக விரோதிகள் மணல் கடத்தி விற்பனை செய்து வருகின்றனர். இதை தடுக்க முடியாமல் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை வேடிக்கை பார்த்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்தும், 216 எம்சாண்ட் குவாரிகளுக்கு சான்று கொடுத்தும் அங்கு எதிர்பார்த்த அளவுக்கு மணல் விற்பனை ஆகவில்லை. குறிப்பாக, வெளிநாட்டு மணல் 55 ஆயிரம் டன் இறக்குமதி செய்வது பல ஆயிரம் டன் தேங்கி கிடக்கிறது. அதே போன்று 11 ஆயிரம் லோடு எம்சாண்ட் தயாரித்தாலும் வாங்க யாரும் முன்வரவில்லை.இதற்கு, தாராளமாக மணல் கடத்தி விற்பனை செய்வதே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. இதனால் ஆண்டுக்கு தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மணல் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி தலைமையில் பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, மணல் கடத்தலை தடுத்து, வெளிநாட்டு மணல் மற்றும் எம்சாண்ட் எனப்படும் செயற்கை மணலை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், வருவாய்த்துறை அதிகாரிகளுடன் இணைந்து மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தற்போது உள்ளூர் வருவாய், காவல்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் துணை கொண்டு மணல் கடத்தப்படுகிறது. அப்படி இருக்கும் போது மணல் கடத்தலை எப்படி தடுக்க முடியும் என்ற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.



Tags : Essand For Sale , Foreign Sand, Essand ,Sale
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...