×

ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பு அணி திரண்டன எதிர்க்கட்சிகள்: ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா உட்பட தலைவர்கள் பங்கேற்பு

ராஞ்சி:  ஜார்க்கண்ட் முக்தி  மோர்ச்சா தலைவர்  ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் மாநிலத்தின் 11வது முதல்வராக  நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில் காங்கிரஸ் முன்னாள்  தலைவர் ராகுல்,  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி  உட்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர்.ஜார்க்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (எம்எம்), காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தனித்து 30 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. இது தவிர, ஜார்கண்ட் விகாஸ் மோர்ச்சாவின் 3 எம்எல்ஏ.க்கள், கம்யூனிஸ்ட்(எம்எல்) எம்எல்ஏ ஒருவரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆதரவு கொடுத்தனர்.  25 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று பாஜ. ஆட்சியை பறிகொடுத்தது.

மொத்தம் 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு  41 இடங்களை பெற வேண்டும். ஆனால், கூட்டணி கட்சிகளின் பலத்துடன் 47 தொகுதிகளை வென்ற ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியேற்பு விழா ராஞ்சியில் நேற்று நடந்தது. இதில், மாநிலத்தின் 11வது முதல்வராக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். தொடர்ந்து, காங்கிரஸ் சட்டப்பேரவை கட்சித் தலைவர் அலாம்கிர் அலாம், மாநில காங்கிரஸ் தலைவர் ராமேஸ்வர் ஓரன் மற்றும் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி எம்எல்ஏ சத்யானந்த் போக்தா ஆகியோர் கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இந்த பதவியேற்பு விழாவுக்கு பாஜ.வுக்கு எதிரான அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. இதை ஏற்று, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, திமுக எம்பி கனிமொழி, ராஜஸ்தான் முதல்வர்  அசோக் கெலாட், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு, ஹேமந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இரண்டாவது முறையாக முதல்வர்
ஜார்க்கண்ட் முதல்வராக 2வது முறையாக ஹேமந்த் சோரன் தற்போது பதவியேற்று உள்ளார். ஏற்கனவே, கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி முதல் 14 மாதங்கள் முதல்வராக இருந்தார். ேஜஎம்எம் நிறுவனரும், ஹேமந்தின் தந்தையுமான சிபுசோரன் 3 முறை, இம்மாநில முதல்வராக இருந்தவர். இவருடைய மூத்த மகன் துர்கா சோரன்தான், தந்தையின் அரசியல் வாரிசாக உருவாகி வந்தார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கோளாறு காரணமாக துர்கா உயிரிழந்த நிலையில், இளைய மகன் ஹேமந்த் அரசியலுக்குள் பிரவேசித்தார். 2013ம் ஆண்டு இம்மாநில முதல்வரானார். 2014ம் ஆண்டு அரசியல் நிலையற்ற தன்மை காரணமாக பாஜ ஆட்சியை கைப்பற்றி ரகுபர் தாஸ் முதல்வரானார். 2014 தேர்தலில் வெற்றி பெற்று ஹேமந்த், எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

ராகுல் நம்பிக்கை
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ராஞ்சியில் நடந்த ஹேமந்த் சோரனின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். ஜார்கண்டில் பொறுப்பேற்றுள்ள புதிய அரசு, அனைத்து குடிமக்களும் பயன் பெறும் வகையில் பணியாற்றும் என்பதில் நம்பிக்கையோடு இருக்கிறேன், என கூறியுள்ளார்.


Tags : Hemant Soren ,chief minister ,Jharkhand ,leaders ,Opposition , Hemant Soren,sworn, Jharkhand ,chief minister Opposition,leaders
× RELATED பாஜவில் இணைந்த சீதா சோரன் பற்றி...