×

அசாமில் நடைமுறைக்கு வருகிறது குடியுரிமை திருத்தச் சட்டம்: 3,000 பேரை அடைத்து வைக்க ரூ.46 கோடியில் தடுப்பு மையம்....குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாதவர்களுக்கு சிக்கல்

கவுகாத்தி: குடியுரிமை திருத்த சட்டம் அசாமில் நடைமுறைப்படுத்தும் வகையில், 3,000 பேரை அடைத்து வைக்கும் வகையில் ரூ.46 கோடி மதிப்பில் தடுப்பு மையம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து வரும் மார்ச்சில் திறந்து நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்கள் ெதாடங்கி இன்று நாடு முழுவதும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் மத்திய பாஜ அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றன. கடந்த 22ம் தேதி பிரதமர் மோடி டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ‘இந்தியாவில் தடுப்புக்காவல் முகாம்கள் எதுவும் இல்லை’ என்றார். இவரது பேச்சு டெல்லி அரசியலில் புயலை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் தரப்பில் பிரதமர் மோடி பல இடங்களில் பொய் சொல்வதாக கூறி குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், அசாமில் இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பு மையத்தின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

கவுகாத்தியில் இருந்து 129 கி.மீ தூரத்தில் உள்ள கோல்பாராவில் உள்ள மத்தியாவில் ரூ.46 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் தடுப்பு மையத்தில் 3,000 கைதிகளை தங்க வைக்க முடியும். இந்த மாதத்தில் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் இருந்த நிலையில், மழைக்காலத்தால் தற்காலிகமாக பணிகள் முடிவு பெறாமல் உள்ளது. கட்டுமானத்தை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டு, மூலப் பொருட்கள் குவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு அதிகாரிகளின் மேற்பார்வையில் கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.குடியுரிமை திருத்த சட்டத்தின்படி, முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகள் மற்றும் சமணர்களுக்கு இந்திய குடியுரிமையை விரைவாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து வருவோருக்கு இந்திய குடியுரிமை வழங்க புதிய சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, குடியுரிமை சட்டம் அமல்படுத்தும் போது, மேற்கண்ட விதிகளுக்கு அப்பாற்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தடுப்பு மையத்தில் அடைத்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், பிரதமர் மோடி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, “காங்கிரசும், அதன் நண்பர்களும், சில நகர்ப்புற நக்சல்களும் அனைத்து முஸ்லிம்களும் தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்று வதந்திகளை பரப்புகிறார்கள்” என்று பேசினார். நிலைமை இவ்வாறிருக்கமாத்தியாவில், 15 நான்கு மாடி கட்டமைப்புகளுடன் கூடிய தடுப்பு மைய பணிகள் வேகமாக நடக்கிறது. ஒவ்வொன்றிலும் தலா 200 கைதிகள் வரை தங்க வைக்க முடியும். தடுப்பு மையத்தின் பணிகள் டிசம்பரில் தொடங்கப்பட்டன. வீட்டுவசதி குடியிருப்புகள் தவிர, 20-22 அடி உயர எல்லை சுவர்களால் சூழப்பட்ட இந்த தடுப்பு மையத்தில், ஒரு பணியாளர் குடியிருப்பு, மருத்துவமனை, பள்ளி, ஒரு அலுவலக வளாகம், சமையலறை மற்றும் உணவு மற்றும் சமூக இடம் ஆகியவை இருக்கும். மேலும், ஆறு கழிப்பறை தொகுதிகள் உள்ளன; ஒவ்வொன்றிலும் 15 கழிப்பறைகள் மற்றும் சம எண்ணிக்கையிலான குளியலறைகள் உள்ளன.

நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாக நடைபெறும் நிலையில், தடுப்பு மையப்பணிகளும் தீவிரமாக நடப்பதால், சந்தேகத்திற்கு இடமான குடிமக்கள் தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கப்படுவர் என்று கூறப்படுகிறது. இதில், பாஜ ஆளும் மாநிலங்களில் தடுப்பு மையங்கள் அமைக்கப்படும் என்று, அந்தந்த மாநில முதல்வர்கள் அறிவித்து வருகின்றனர். அதனால், சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களாக அடையாளம் காணப்படுபவர்களை தடுப்பு மையத்திற்கு அனுப்ப வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அசாம் மாநில அரசாங்க அதிகாரிகள் கூறியதாவது: பெரும்பாலான வீட்டு குடியிருப்புகளின் கட்டுமானம் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும்; மாநிலத்தில் உள்ள பிற தடுப்பு மையங்களின் கைதிகள் இங்கு மாற்றப்படுவார்கள். அசாமில் இதுபோன்று 10 தடுப்புக்காவல் நிலையங்களை நிர்மாணிப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. அசாமின் மற்ற ஆறு தடுப்புக்காவல் நிலையங்களும் (கோல்பாரா, கோக்ராஜர், ஜோர்ஹாட், திப்ருகார், தேஸ்பூர், சில்சார்), 2009 மற்றும் 2015 ஆண்டுக்கு இடையில் மாவட்ட சிறைகளுக்குள் அமைக்கப்பட்டுள்ளன. நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் தடுப்பு மையங்கள் அமைக்கப்பட்டன.

அரசாங்க பதிவுகளின்படி, 1985 முதல் (அசாம் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபோது) அக்டோபர் 2019 வரை, கிட்டத்தட்ட 1,29,000 பேர் வெளிநாட்டினராக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 73,000 பேர் காணவில்லை. அவர்கள் நாடு கடத்தப்படவில்லை அல்லது காவலில் வைக்கப்படவில்லை. அசாம் அரசாங்க பதிவுகளின்படி, 2019 நவம்பர் வரை, ஆறு தடுப்பு மையங்களில் மொத்தம் 988 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 957 பேர் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டாலும், 31 குழந்தைகள் தங்கள் தாய்மார்களுடன் சேர்ந்து தங்கியுள்ளனர். 2016 முதல் அக்டோபர் 2019 வரை 28 கைதிகள் இறந்துள்ளனர்.இந்த மையங்களின் கைதிகள், வாக்காளர் பட்டியலில் டி-வாக்காளர்களாக (குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள்) குறிக்கப்பட்டவர்கள் மற்றும் மாநில காவல்துறையினரால் வெளிநாட்டினர் என சந்தேகிக்கப்படுபவர்கள். இவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க அதற்கான அலுவலகத்தை அணுக வேண்டும். அதில் அவர்கள் நிரூபணம் செய்யவில்லை என்றால், தடுப்பு மையங்களுக்கு அனுப்பப்படுகிறார்கள். சமீபத்தில் வெளியிடப்பட்ட என்ஆர்சியில் 19 லட்சம் மக்களின் பெயர் பதிவேட்டில் இல்லை. அவர்கள் இன்னும் தடுப்பு மையங்களில் வைக்கப்படவில்லை. அவர்கள் தங்களது குடியுரிமையை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினர்


கோல்பாரா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் ஏ.ஆர்.புகான் கூறுகையில், “தற்போது கோல்பாரா மாவட்ட சிறையில் 366 கைதிகள் உள்ளனர். அவர்களில் 184 பேர் வெளிநாட்டினர் என்று அறிவிக்கப்பட்டு வேறு பிரிவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பதிவு செய்யப்பட்டுள்ள ‘அறிவிக்கப்பட்ட வெளிநாட்டினருக்கு’ நிபந்தனை ஜாமீன் வழங்கியதால், நாங்கள் 56 கைதிகளை விடுவித்தோம். எங்கள் தடுப்பு மையத்தில் வசதிகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். உணவின் தரம் மேம்பட்டுள்ளது’’ என்றார்.

முன்னதாக கடந்த ஜனவரி மாதம், மத்திய உள்துறை அமைச்சகம் தடுப்பு மையங்களுக்கான ஒரு கையேட்டை வெளியிட்டது. அதில், தடுப்பு மையங்களில் இருப்பவர்கள் சுய கவுரவத்துடன் இருக்க வேண்டும். அங்கு, அறைகள் காற்றோட்டமாகவும், நன்கு வெளிச்சமாகவும், சுகாதாரமாகவும், நீர், மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகளுடன் இருக்க வேண்டும். கைதிகள் சுற்றுவதற்கு திறந்தவெளி, குடும்ப உறுப்பினர்களை ஒரே வசதியில் தடுத்து வைத்தல், பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் திருநங்கைகளின் தேவைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.

என் கணவர் இங்கு எப்படி வந்தார்?

மேற்குவங்காளத்தைச் சேர்ந்த மிருணல் மொண்டால், அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் மளிகைக் கடையை  நடத்தி வந்தபோது, ​​அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. நீண்ட போராட்டத்திற்கு பின், அவர் வாக்காளர் பட்டியலில் டி-வாக்காளராக (குடியுரிமைக்கான ஆதாரம் இல்லாமல் சந்தேகத்திற்கிடமான வாக்காளர்கள்) பதிவு செய்யப்பட்டது. அதிகாரிகளின் விசாரணைக்கு பின்னர், தொடர்ந்து அவர் ஒரு வெளிநாட்டவர் என்று அறிவிக்கப்பட்டார். இந்த ஆண்டு  ஆகஸ்டில் கோல்பாரா தடுப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து, அவரது மனைவி கலிதா மொண்டல் கூறுகையில், ‘‘தடுப்புக்காவல் நிலையங்களில் தங்கியிருப்பவர்களுக்கு வாழ்க்கை கடினமாக இருக்கும்போது, ​​அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கடினமான மனநிலையில்தான் வாழ வேண்டி உள்ளது. உள்ளே தங்கியிருந்த கணவர் மிருணலை சந்திக்க எனது 10 வயது மகளுடன் கவுகாத்தி அடுத்த கோல்பாரா சென்றேன். என் கணவர் எப்படி இங்கே வர முடிந்தது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. என் வாழ்க்கை சிதைந்துவிட்டது” என்றார்.

Tags : Assam ,Crore Detention Center ,Citizenship Amendment Act to Become Assam Rs. , Assam, Citizenship Amendment Act, Detention Center, Source
× RELATED எல்லோருக்கும் எல்லாவற்றையும் என்ற...