குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் பெண் எம்.எல்.ஏ. நீக்கம்: மாயாவதி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு

லக்னோ: குடியுரிமை சட்டத்தை ஆதரித்த பதாரியா தொகுதி பெண் எம்எல்ஏ ரமாபாய் பிரிஹார் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். கட்சி நிகழ்ச்சிகளிலும் ரமாபாய் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாயாவதி அறிவித்துள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சில கட்சிகள் போராட்டம் நடத்தியது. அதில், பகுஜன் சமாஜ் கட்சியும் எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் எதிராக ஓட்டளித்தது. கடந்த வாரம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த அக்கட்சியினர் குடியுரிமை சட்டம், அரசியலமைப்பு பிரிவு 14, 21-க்கு எதிரானது எனவும், இந்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதற்கிடையே மத்திய பிரதேச மாநிலம் பதேரியா தொகுதி அக்கட்சி எம்எல்ஏ. ராமாபாய் பரிஹார் ஒரு கூட்டத்தில் பேசும்போது; குடியுரிமை சட்டத்தை சுமூகமாக அமல்படுத்தியதற்காக பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவிற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சிறந்த முடிவை முன்னதாகவே எடுத்திருக்கவேண்டும். கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருப்பவர்கள் அத்தகைய முடிவை எடுக்க தகுதியற்றவர்கள் என தெரிகிறது. நானும் எனது குடும்பத்தினரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரிக்கிறோம் என பேசியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தலைமையின் கட்டுப்பாட்டை மீறிய வகையில் செயல்பட்டதால் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ரமாபாய் பரிஹார் நீக்கப்பட்டதாகவும் அவர் கட்சி தொடர்புடைய நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் மாயவதி தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது; எம்.பி., எம்.எல்.ஏ., என யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும். பதேரியா தொகுதியின் எம்.எல்.ஏ., ராமாபாய் பரிஹார் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்ததால் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>