×

முதல்வர் துவக்கி வைத்து ஓராண்டாகிறது தரைமட்டமான நெல்லை சந்திப்பு புதிய பஸ் ஸ்டாண்ட்: ஸ்மார்ட் சிட்டி திட்டம் கனவா?

நெல்லை: நெல்லை சந்திப்பில் ரூ.78 கோடியில் அமைக்கப்படவுள்ள 3 அடுக்கு மாடி புதிய பஸ் நிலையத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டி ஓராண்டாகியும் இன்னும் கட்டுமானப் பணிகள் கூட துவங்கவில்லை. 18 மாதங்களுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்ட பஸ் ஸ்டாண்ட் பணிகள் ஓராண்டாகியும் துவங்காததால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. நெல்லை சந்திப்பு பெரியார் பஸ் நிலையம் 1956ம் ஆண்டு 4.25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது. 60 ஆண்டுகள் பழமையான இந்த பஸ்நிலையத்தை இடித்து விட்டு தரை தளம் மற்றும் 3 தளங்களுடன் அடுக்குமாடி பஸ் நிலையம் அமைத்திட திட்டமிடப்பட்டது. தரை தளத்தில் 1629 இரு சக்கர வாகனங்கள், 106 நான்கு சக்கர வாகனங்கள், 27 பஸ்கள் நிறுத்தும் வசதி, 30 கடைகள், 4 லிப்ட்கள், 2 நகரும் படிக்கட்டுகள், முதல் தளத்தில் 82 கடைகள், இரண்டாம், மூன்றாம் தளத்தில் தலா 16 கடைகள் என சந்திப்பு பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.78.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நெல்லை சந்திப்பில் அமைக்கப்படும் இந்த புதிய பஸ் நிலையத்திற்கு சென்னையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் கடந்தாண்டு டிச.17ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். 60 ஆண்டுகள் பழமையான நெல்லை சந்திப்பு பேருந்து நிலையம், நகரும் படிக்கட்டுகள், லிப்ட் என பல்நோக்கு தொழில்நுட்பத்தில் அமைக்கப்படும் என நெல்லை மாவட்ட கலெக்டரும் உறுதியளித்தார். சந்திப்பு புதிய பஸ் ஸ்டாண்டை அடுத்த 18 மாதங்களில் கட்டி முடிப்போம் என அதிகாரிகள் கூறினர்.
ஆனால் 12 மாதங்கள் கடந்த நிலையில், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் கட்டுமானப் பணிகள் எதுவும் நடக்காதது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. இந்த பஸ்நிலையம் கடந்த ஓராண்டில் கடந்து வந்த பாதையை கணக்கில் கொண்டால் எவ்வித திட்டமிடலும் இன்றி இடிக்கப்பட்டதை உணரலாம். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் மூடப்பட்டபோது, பஸ்களை வெளியில் நிறுத்திட 4 தற்காலிக பஸ் நிலையங்களை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் சேர்ந்து அறிவித்தன.

ஆனால் இன்று வரை அந்த பஸ் நிறுத்தங்கள் நடைமுறைக்கு வரவே இல்லை. அரசு போக்குவரத்து கழகத்தினர் நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை விட்டு நகர மறுப்பு தெரிவித்ததால், நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை பஸ்கள் அனைத்தும் சுற்றி வர ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பணிகள் நடக்கும் இடத்தை தகரத்தால் தடுப்பு ஏற்படுத்திக் கொண்டு, மாநகராட்சி அதிகாரிகள் வேலையை தொடங்கினர். நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தை தோண்டும்போது அள்ள, அள்ள குறையாமல் அமுத சுரபியாய் வந்த மணல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் பள்ளத்தில் ஊறிய நீரும் பணிகளை தாமதப்படுத்தியது.இதையும் கடந்து பணிகளை தொடங்க முற்பட்டபோது, தென்பக்கமும், மேற்கு பக்கமும் இருந்த கடைகளின் உரிமையாளர்கள் நகர மறுத்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நெல்லை சந்திப்பு பஸ்நிலையத்தை சுற்றியிருந்த கடைகளை அகற்றவே மாநகராட்சி 10 மாத காலம் சட்டப் போராட்டம் நடத்தியது. இச்சூழலில் மாநகராட்சி எதிரே பொருட்காட்சி மைதானத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைத்து அனைத்து பஸ்களும் அங்கே வழியனுப்பி வைக்கப்பட்டன. இந்த கால கட்டத்தில் ஏற்கனவே கையகப்படுத்திய பகுதியிலாவது பணிகள் நடைபெறும் என எதிர்பார்த்த மக்களுக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அங்கு மணலையும், தண்ணீரையும் காட்டி நெல்லை மாநகராட்சி பணிகளை தாமதப்படுத்தியது. இதன் விளைவு கடந்த ஓராண்டாக பொதுமக்கள் படும்பாடு சொல்லி மாளாது.

‘‘பஸ் நிலையமும், ரயில் நிலையமும் அருகருகே இருப்பது நெல்லை மாதிரியான ஒரு சில நகரங்களில் மட்டுமே காணமுடியும். யார் கண் பட்டதோ அதிலும் சமீபகாலமாக மண் விழுந்துவிட்டது. தொலை தூரங்களில் இருக்கும் பஸ் நிறுத்தங்களில் இறங்கி தினமும் மக்கள் ஓட்டமும் நடையுமாக நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வருவதை தற்போது பார்த்தால் பரிதாபமாக உள்ளது. நெல்லை ரயில் நிலையத்திற்கு வருவதற்கு பஸ்சில் அண்ணா சிலைக்கு மேற்கே இறங்கி நடந்து வர வேண்டும். இல்ைலயெனில் புரத்தில் இறங்கி மேற்கு வாசல் நோக்கி நடந்து வரவேண்டும். புதிய பஸ் நிலையத்தில் இருந்து வருவோர் மட்டுமே, நெல்லை ரயில் நிலையத்திற்கு நேரடியாக வர முடிகிறது. மற்றபடி கிராமங்களில் இருந்து வருவோர் நெல்லை ரயில் நிலைத்திற்கு வர படாதபாடு படுகின்றனர்’ என பயணிகளின் அவலங்களை சுட்டிக்காட்டுகிறார் நெல்லை பயணிகள் சங்க நிர்வாகி தியாகராஜநகர் செல்வக்குமார்.நெல்லை சந்திப்பில் தற்போதைய பஸ் நெருக்கடியும் சொல்லி மாளாது. ஒருவழிப்பாதை அனைத்தும் இருவழிப்பாதையாக இருப்பதால் அரசு பஸ்களும், தனியார் வாகனங்களும் அடிக்கடி உரசிக்கொண்டு நிற்கின்றன. மாலை, இரவு நேரங்களில் த.மு.சாலையையும், மதுரை சாலையையும் கடந்து வர பெரும்பாடு பட வேண்டியதுள்ளது. நெல்லை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயிலை பிடிக்க மாலையில் அவசரம், அவசரமாக செல்வோர் போக்குவரத்து நெருக்கடியால் திகைத்து நிற்கின்றனர். 15க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தை சுற்றிச் சுற்றி வருவதால், வாகனங்கள் ஆங்காங்கே ேதங்கி நிற்கின்றன.

தச்சநல்லூருக்கு இயக்கப்படும் ஷேர் ஆட்டோக்களும் போக்குவரத்து நெருக்கடியில் தங்கள் பங்களிப்பை செய்கின்றன.நெல்லை தாமிரபரணி மேம்பாலத்தை தாண்டியவுடன் அமைக்கப்பட்டுள்ள பஸ் நிறுத்தங்களும் வாகன போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கின்றன. தேவர் சிலை தாண்டியவுடன் சாலையில் காணப்படும் பஸ் நிறுத்தமும், மறுமார்க்கமாக தனியார் கண் மருத்துவமனை அருகே காணப்படும் பஸ் நிறுத்தமும், காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெருக்கடியை உருவாக்குகின்றன. குறிப்பிட்ட பேருந்து நிறுத்தங்களில் தனியார் பஸ்கள் நின்று கொண்டு ஆள் ஏற்றுவதற்காக அடம்பிடிக்கின்றன. அங்கு நிற்கும் போக்குவரத்து போலீசாரை கூட தனியார் பஸ்கள் சட்டை செய்வதில்லை.   ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பணிகளை எடுத்துக் கொண்டால் தரைத்தளம் கட்டுமானப் பணிகள் கூட இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை. தரைமட்டமாகி கிடக்கும் பஸ் நிலையம் எப்போது புதுப்பிக்கப்படும் என்பது ஸ்மார்ட் சிட்டி அதிகாரிகளுக்கு தெரியவில்லை. 3 தளங்களுடன் அடுக்குமாடி பஸ்நிலையம் என்ற கனவோடு காத்திருக்கும் பயணிகள் தினமும் நெல்லை சந்திப்பை தாண்டி செல்லும் போது பெருமூச்சுவிடுகின்றனர். பஸ் நிலையம் 18 மாதங்களில் அமையும் என்றது அரசு. 36 மாதங்களிலாவது அமையுமா என்பதே இப்போதைய கேள்வி.

வர்த்தகம் சரிபாதியாக சரிவு
பஸ் நிலையம் இடிக்கப்பட்டதால் நெல்லை சந்திப்பின் வர்த்தகம் சரிபாதியாக குறைந்துவிட்டதாக வியாபாரிகள் வருத்தப்படுகின்றனர். இதுகுறித்து நெல்லை சந்திப்பு தனியார் டிபன் சென்டர் உரிமையாளர் மீனாட்சிபுரம் ஜெயக்குமார் கூறுகையில், ‘‘நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் இடிக்கப்பட்ட நாளில் இருந்தே வியாபாரம் இப்பகுதியில் படுத்துவிட்டது. ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளை நம்பியே இப்போது கடைகளை நடத்தி வருகிறோம். நெல்லை சந்திப்பை சுற்றிலும் உள்ள ஓட்டல்கள், டீ கடைகள், பலசரக்கு, காய்கறி கடைகள் என அனைத்திலுமே வியாபாரம் சரிபாதியாக குறைந்துவிட்டது. சில வியாபாரிகள் பிழைப்புக்கு வழியின்றி இங்கிருந்து வேறிடம் சென்றுவிட்டனர். நெல்லை சந்திப்பு பஸ் நிலைய பணிகளை விரைவுப்படுத்தி, மீண்டும் நெல்லையை மெருகேற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மழையால் பாதிப்பு
பஸ் நிலைய பணிகள் குறித்து நெல்லை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘நெல்லை சந்திப்பு பகுதியில் பஸ்நிலையத்தை சுற்றியுள்ள கடைகளை அகற்றுவதில் எங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்ததால் பணிகளை முதல் 7 மாதங்கள் மும்முரமாக செய்ய முடியவில்லை. தரைத்தள பணிகளை நடத்த குழிகளை தோண்டிய போது உள்ளிருந்து வெளியேறிய நீர்பிடிப்பும் பணிகளை காலதாமதப்படுத்தின. கடந்த இரு மாதங்களாக அடித்து பெய்த மழையும் பணிகள் சுணக்கம் அடைவதற்கு காரணமாக இருந்தது. இன்னும் ஓராண்டிற்குள் பணிகளை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம்’’ என்றனர்.

Tags : New Year , New Year',Bus Stand, Smart City ,Project?
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!