×

பொருளாதார மந்த நிலையால் விபரீதம் திணறும் திருப்பூர் ஜாப் ஒர்க் நிறுவனங்கள்: ஊரை காலி செய்யும் தொழிலாளர்கள்

கோவை: பொருளாதார மந்த நிலை காரணமாக திருப்பூர் ஜாப் ஒர்க் நிறுவனங்கள் திணறுகின்றன. தொழிலாளர்கள் ஊரை காலி செய்கின்றனர்.திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட பின்னலாடை சார்ந்த நிட்டிங், டையிங், பிளிச்சிங், காம்பாக்டிங், ஸ்டீம் காலரிங், பிரிண்டிங், ஓவர்லாக், பேட்லாக், சிங்கர், அயனிங், பேக்கிங் உள்ளிட்ட துறைகளில் 8 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். வடமாநிலங்களில் இருந்து 4 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூர் மாவட்டம் முழுவதும் வேலை பார்க்கின்றனர். கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி. வரி அமுல்படுத்தியதை தொடர்ந்து, திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வந்தன. ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்தால் மட்டுமே மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சலுகைகள் பெற முடியும், வங்கிகளில் கடன் பெற முடியும் என்ற வரம்புக்குள் இந்நிறுவனங்கள் வந்தன. கார்ப்பரேட் நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.யில் பதிவு செய்த குறுந்தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமே ஜாப்-ஆர்டர் வழங்குகின்றன. அத்துடன் பில் உடனுக்குடன் வழங்காமல், பென்டிங் வைத்து வழங்குகின்றன. இதனால், சிறு, குறு ஜாப்-ஆர்டர் நிறுவனங்கள், வர்த்தகத்தை தொய்வின்றி, தொடர்ந்து நடத்த முடியாமல் சிரமத்தில் சிக்கி தவிக்கின்றன.

உலக பின்னலாடை சந்தையில், வியட்நாம், வங்கதேசம், சீனா ஆகிய நாடுகளில் தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கி வருவதோடு, பல நாடுகளுடன் வரியில்லா ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அந்நாட்டு தயாரிப்புகள், சர்வதேச சந்தையில் மலிவான விலைக்கு விற்கப்படுகின்றன. ஆனால், திருப்பூர் நிறுவனங்களுக்கு அதுபோன்ற சலுகை இல்லாத காரணத்தால் சர்வதேச அளவில் போட்டியிட முடியாமல் பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளன. கடந்த 2016-17ம் நிதியாண்டில், உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ரூ.45.09 ஆயிரம் கோடியாக இருந்தது. இது, 2017-18ம் நிதியாண்டில் ரூ.46.58 ஆயிரம் கோடியாகவும், 2018-19ம் நிதியாண்டில் ரூ.46.46 ஆயிரம் கோடியாகவும் உள்ளது.தொழில் துறையினர் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் மூலப்பொருட்களான பஞ்சு, நூல், இயந்திர தளவாடப்பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்கள் விலை உயர்வால் பொதுமக்களிடையே வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பொருட்கள் தேக்கத்தால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி சார்ந்த தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். தொழில் நெருக்கடி காரணமாக, கடந்த நிதியாண்டில் 11 சதவீதம் உற்பத்தி குறைந்துள்ளது.

பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் பின்னலாடை உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால், செலவினங்கள் அதிகரித்துள்ளது. சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து பங்களாதேஷ் வழியாக இந்தியாவிற்கு பல கோடி மதிப்புள்ள ஆடைகள், மின்சாதனப்பொருட்கள் மலிவான விலைக்கு விற்பனைக்கு வருகிறது. இதனால் திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆடைகளின் விலைகளுக்கு ஏற்றவாறு விலைகளை நிர்ணயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் பல கோடி மதிப்புள்ள நவீன இயந்திரங்களை இறக்குமதி செய்து குறைவான தொழிலாளர்களை வைத்துக்கொண்டு அதிக உற்பத்தி செய்தால் மட்டுமே சர்வதேச நாடுகளுடன் போட்டியிட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான தொழில் முனைவோர் வங்கிகளில் கடன் பெற்று, தொழில் செய்து வருகின்றனர். ஒரு சிலர், தனியார் நிதி நிறுவனங்களில் வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்கின்றனர்.

இதனால் தொழில் நிறுவனங்கள் தைக்கும் ஆடைகளில் அதிக லாபம் இருந்தால் மட்டுமே தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவும், வட்டி, அசல் கட்ட முடியும். தற்போது, சர்வதேச பின்னலாடை வர்த்தக சந்தையில் நிலையற்ற தன்மை உள்ளதால் திருப்பூர் நிறுவனங்களும் திணறுகின்றன.குறிப்பாக, ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் குறைந்த லாபத்தில் இயங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று, தொழில் செய்து வந்த 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பவர்-டேபிள் ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் தங்களுடைய இயக்கத்தை நிறுத்திக்கொண்டன. இதனால், ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்நிலை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், திருப்பூர் நிறுவனங்கள் மிகப்பெரிய வீழ்ச்சியை சந்திக்கும் என இங்குளள் தொழில்முனைவோர் அச்சம் தெரிவிக்கின்றனர்.இது குறித்து ஆயத்த ஆடை மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் (பொறுப்பு) கூறியதாவது:  வியட்நாம், பங்ளாதேஷ், சீனா ஆகிய நாடுகளில், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு பல்வேறு வகைகளில் 10 சதவீதம் வரிச்சலுகை வழங்கி வருகிறது. இதனால், உற்பத்தி செலவுகள் குறைந்து, உலக பின்னலாடை சந்தையில் முன்னிலையில் உள்ளனர்.

அதேபோல், நம் நாட்டிலும் ஏற்றுமதி நிறுவனங்களின் குறைகளை மத்திய அரசு கேட்டறிந்து, அதற்கு தகுந்தாற்போல் வரிவிதிப்பு மற்றும் சலுகை வழங்கினால் மட்டுமே உலக வர்த்தக சந்தையில் நாம் முன்னிலைக்கு வரமுடியும். ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய வரி சலுகையை காலதாமதமின்றி வழங்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் வங்கிகளில் கடன் பெற, விதிமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும். கடன் வசூலிப்பதில் வங்கிகள் தீவிரம் காட்டக்கூடாது. ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உள்ள இடர்பாடுகளை களைந்து, ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய வேண்டும். இதை செய்தால்தான், தொழிலாளர்களுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்க முடியும். இவ்வாறு சக்திவேல் கூறினார்.தென்மண்டல அக்ரோ சர்வீஸ் உரிமையாளர் கமலக்கண்ணன் கூறியதாவது: மத்திய அரசு அமல்படுத்தியுள்ள முறையற்ற ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல்வேறு பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. உற்பத்தியாளர்கள் மூலப்பொருட்களை கொள்முதல் செய்யும்போது வரியை முன்கூட்டியே செலுத்துகிறோம்.  விற்பனை செய்யும் போது நுகர்வோரிடம் வரியை வசூலிக்கின்றோம். கொள்முதல் தொகை, வாடகை, மின் கட்டணம், தொழிலாளர்கள் சம்பளம், தேய்மான செலவு உள்பட பல்வேறு செலவினங்களை தாண்டி பொருட்களை விற்பனை செய்ய வேண்டியுள்ளது. உற்பத்தியாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். வேறு வழியின்றி தங்களுடைய நிறுவனங்களை மூடுகின்றனர். மத்திய அரசு, வரியினங்களை சீரமைக்கவில்லையெனில் மிகப்பெரிய வீழ்ச்சி ஏற்படும். இவ்வாறு கமலக்கண்ணன் கூறினார்.

தனியார் பிரிண்டிங் நிறுவன பங்குதாரர் வெங்கடேசன் கூறியதாவது:  கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி பெருமளவு குறைந்துள்ளது. இரண்டு ஷிப்ட் முறையில் வேலைபார்த்த தொழிலாளர்கள், தற்போது ஒரு ஷிப்ட் முறைக்கே அல்லாடுகின்றனர். ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பின் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு, பில் இல்லாமல் எந்த பொருளையும் கொள்முதல் செய்ய முடிவதில்லை. இதனால், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. பின்னலாடை உற்பத்தி ஏற்றுமதி நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை பெற சமீபகாலமாக ஆர்வம் காட்டுவதில்லை. இருக்கக்கூடிய ஆர்டர்களை தொடர்ந்து செய்து கொடுத்தால்போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பணப்புழக்கம் திருப்பூரில் பெருமளவு குறைந்துள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் இருந்து சிறு, குறு நிறுவனங்களுக்கு முழுமையாக விலக்கு அளித்தால் மட்டுமே உள்ளூர் வியாபாரம் தடையின்றி நடைபெறும். இவ்வாறு வெங்கடேசன் கூறினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொழிற்சங்க பொறுப்பாளர் கனகராஜ் கூறுகையில்: ‘’பின்னலாடை நிறுவனங்களில் பீஸ் ரேட் முறையை ஒழிக்கவேண்டும். தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.18 ஆயிரம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். ஓவர்டைம் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கவேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப்., உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை முழுமையாக அமுல்படுத்த வேண்டும்’’ என்றார்.


Tags : Tirupur Job Workers ,Tiruppur Job Work Companies: Empty Workers ,Disaster ,recession , Disaster caused , recession, Tiruppur, Job Work , Empty Workers
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...