×

தா.பேட்டை பகுதி நெசவாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி: அரசு உதவிக்கரம் நீட்டுமா?

தும்பைப் பூ போன்ற  வெண்மையுடன் வேட்டி சட்டை என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவர்கள் அரசியல்வாதிகள்தான். அந்த வகையில் அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்து மக்கள் மனதில் வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர். அவர் விரும்பி கட்டிய வேட்டிகளை தயார் செய்து கொடுத்த நெசவாளர்கள் இன்று நலிவடைந்த நிலையில் வெளியூர்களில் தஞ்சமடைந்து பஞ்சம் பிழைத்து  கொண்டிருப்பது பெரிதும் வேதனையளிக்கிறது. வாழ்விழந்து நலிவடைந்த நெசவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகவும் கோரிக்கையாக உள்ளது.

திருச்சி மாவட்டம், முசிறி  தாலுகாவிற்கு உட்பட்ட தாத்தையங்கார்பேட்டையில் சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு நெசவாளர்கள் வசிக்கும் காலனி பக்கம் சென்றாலே இரவு, பகல் பாராமல் நாடாவின் ஒலிகள் வீதிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுமார் 1000 நெசவு தறிகள்  அமைத்து அதனை சார்ந்த ஆயிரம் குடும்பங்களும் வாழ்ந்து வந்தனர். போதிய வருவாய் இல்லாமலும் விசைத்தறி தொழிலுக்கும், மில் ஜவுளி ரகங்களுக்கும்,  ஈடுகொடுக்க முடியாத கைத்தறி நெசவாளர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கு உதவிய நெசவு தொழிலை கைவிட்டு பஞ்சம் பிழைக்க வெளியூருக்கு சென்றனர் .தொழிலை இழந்த நெசவாளர்கள்  திருப்பூர், கரூர், ஈரோடு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து அங்கே கிடைத்த கூலி தொழில்களை செய்து தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர்.

நெசவு தொழில் செய்து தற்போது செருப்பு கடை  நடத்திவரும் சிவா என்பவர் கூறும்போது, தா.பேட்டை நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி  துயரத்தை போக்கிட தமிழக அரசு முன்வர வேண்டும். தா. பேட்டையில் தற்போது நெசவு தொழில் செய்து வரும் நெசவாளர்களுக்கு நவீன தறிகளில் நெசவு செய்வதற்கு பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் மின் விசைத்தறி கூடங்களை அமைத்து அதில் நெசவாளர்களுக்கு  உதவித்தொகையுடன் முறையாக பயிற்சி அளித்து வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். மேலும் தா.பேட்டை நெசவாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் கட்டிக்கொடுத்த காலனி வீடுகளுக்கு பத்திரம் ,பட்டா ஆகியவை பெரும்பாலான நெசவாளர்களுக்கு இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. அவற்றை வழங்கிட தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வயது முதிர்ந்த நெசவாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சுமார் இருபது வருடங்களுக்கு முன்பு நெசவுத்தொழிலால் நலிந்து போன நெசவாளியின் குடும்பத்தின் நிலை குறித்து தற்போதைய தமிழக அரசு சிந்திக்க சற்று நேரம் ஒதுக்க வேண்டும். உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில்  நெசவாளர்களின் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்க தமிழக அரசு மனது வைத்தால் நிச்சயமாக  முடியும் என்று இப்பகுதி சமூக ஆர்வலர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

நெசவுத் தொழிலாளி ராஜகோபால் என்பவர் கூறும்போது தாத்தையங்கார் பேட்டையில் 1945 காலகட்டத்தில் நெசவாளர் கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டது. இந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த நெசவாளர்கள் வேட்டிகளை கைத்தறியில் நெய்து சங்கத்தில் கொடுத்து அதற்குரிய பணத்தை பெற்று வாழ்க்கையை நடத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் சங்கம் நலிவடைந்தது. அதனை சார்ந்து வாழ்ந்த நெசவாளர்களும் வாழ்விழந்தனர் . கைத்தறி நெசவில் போதிய வருவாய் இல்லாமலும், மில் ஜவுளி ரகங்களின் வரவாலும் , விசைத்தறிகளுடன்  போட்டி போட முடியாமலும்  கைத்தறி தொழில் நசிந்து போனது. தா.பேட்டை கைத்தறி நெசவாளர்கள் வேட்டிகளில் 100, 120 ரகங்களும் , ஜரிகை துண்டு, சேலை உள்ளிட்ட பல்வேறு ரகங்களை மிகுந்த தரத்துடன் கலைநயத்துடன் செய்ய வல்லவர்கள். தா.பேட்டை கைத்தறி நெசவாளர்கள் செய்த வேட்டிக்கு ஐஎஸ்ஐ தரத்துடன் கூடிய அங்கீகாரம் கிடைக்க பெற்றதே அதற்கு சான்றாகும்.

தா.பேட்டை நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள்  தலைவர்  பாலசுந்தரம் கூறும்போது,
தா.பேட்டை கைத்தறி நெசவாளர்கள் நெய்த 120க்கு 120 ரக  வேட்டிகளை முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் விரும்பி அணிந்து மகிழ்வார். அதிமுக, கட்சி கரையுடன் கூடிய வேட்டிகளை மிகுந்த சிரத்தையுடன், திறமையான நெசவாளர்களை கொண்டு நெய்து எம்ஜிஆருக்கு சென்னைக்கு அனுப்பி வைப்போம். அதனை அவர் விரும்பி கட்டிக் கொள்வார். அதேபோல் முன்னாள் முதலமைச்சர், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு முன்னணி அரசியல் தலைவர்களும்  தா.பேட்டை கைத்தறி வேட்டிகளை  கட்டி மகிழ்ந்துள்ளனர். வெள்ளி ஜரிகை கொண்டு பழனி முருகன் கோயிலுக்கு தா .பேட்டையில் இருந்து பட்டு துண்டுகள் அனுப்பி வைக்கப்படும் வழக்கமும் இருந்தது.

பழனி முருகன் கோயில் சார்பில் உபயதாரர்களுக்கும், தங்கரதம் இழுப்பவர்களுக்கும், வஸ்திர மரியாதை செய்வதற்கு தா.பேட்டை கைத்தறி துண்டுகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. பஞ்சினும், பட்டினும், மெல்லிய கைத்தறி வேட்டிகள் தா.பேட்டையில் தயாரானது. பஞ்சு மென்மையானது, பட்டு அதை விட மென்மையானது. அதனினும் மெல்லிய உடுத்துவதற்கு இதமான பருத்தி வேட்டிகளை தயார் செய்த நெசவு தொழிலாளர்கள் இன்று ஹோட்டல்களில் சப்ளையர் ஆகவும் , திருமண மண்டபங்களில் சமையல் கலைஞர்களாகவும், உணவு பரிமாறுபவர் களாகவும் ,திருப்பூர் பனியன் கம்பெனிகளில் கூலித் தொழிலாளர்களாகவும், மதுபான பார்களில்  உதவியாளர்களாகவும் , கொத்தனார், சித்தாளாகவும்  வெளியூர்களுக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். மனிதனின் மானம் காக்க ஆடை நெய்த நெசவாளர்களின் நிலை  இன்று வயிற்றுப் பிழைப்புக்காக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில் உள்ளது என வேதனையுடன் கூறினார்.

Tags : Government , Thread ,weavers, Livelihood, Questionnaire, government ,extend support?
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...